மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது!
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பன்னீர்செல்வம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ராமதாசை சந்தித்துப் பேசினர். பின்னர், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்போது ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பிறகு கூட்டணி தொடர்பாக பேசி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக - பாமக கூட்டணி ஒப்பந்தத்தில், அதிமுக சார்பில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோரும், பாமக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணியும் கையெழுத்திட்டனர்.
மற்றொருபுறம் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான கூட்டணி இன்று உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையொட்டி, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வருவதாக இருந்த நிலையில் அப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்த பிறகு பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என அதிமுக கருதியிருப்பதாகத் தெரிகிறது.