EVKS Elangovan Political Life: ஈவிகேஎஸ் இளங்கோவன் தன் அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் தொடங்கினார். அவரது தந்தை ஈ.வி.கே சம்பத் தமிழக அரசியலில் 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்பட்டவர். ஈ.வி.கே சம்பத் தந்தை பெரியாரின் உடன்பிறந்த அண்ணன் மகன் ஆவார். ஒரு காலகட்டத்தில் பெரியாரின் அரசியல் வாரிசாகவும் ஈ.வி.கே சம்பத் பேசப்பட்டார்.
பெரியாரின் குடும்பத்தில் இருந்து வந்தாலும் சில கருத்து முரண்கள் காரணமாக அவரைவிட்டு பிரிந்து, ஈ.வி.கே சம்பத் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார். ஈ.வி.கே சம்பத் மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் சம்பத்தின் நெருங்கிய நண்பரும், அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்த சிவாஜி கணேசன் உடன் 1977ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒன்றாக பயணித்தார்.
தேர்தல் அரசியலில் முதல் வெற்றி
அப்போது 1984ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர் மேல் சிகிச்சைகாக அமெரிக்காவில் இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமருமான இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தார். இதனால் தமிழகத்தில் அதிமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு பலமான அனுதாப ஆதரவு அலை வீசியது. இதனால், 1984 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி அசூர வெற்றியை பதிவு செய்தது.
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி அதிக அறுதிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று ராஜீவ் காந்தி முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். தமிழ்நாட்டில் அதிமுக – காங்கிரஸ் பலமான வெற்றி பெற்றாலும், அதிமுக தனிபெரும்பான்மையை பெற்றது. தொடர்ந்து எம்ஜிஆர் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். அந்த தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிவாஜி கணேசனின் ஆதரவு பிரிவினராக போட்டியில் வெற்றி பெற்றார். தேர்தல் அரசியலில் முதல்முறை இறங்கிய அவருக்கு வெற்றி கிடைத்தது.
ஜானகி ஆதரவு
எம். ஜி. ஆர் மரணத்திற்கு பிறகு அவரது மனைவி ஜானகிக்கு தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பிரதமருமான ராஜீவ் காந்தி ஆதரவளிக்க மறுப்பு தெரிவித்தார். ஆனால், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான சிவாஜி கணேசன் வி. என். ஜானகிக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவருடன் பல ஆதரவாளர்களும் வெளியேறினார்கள். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், 1989 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக (ஜா) அணிக்கு ஆதரவாக சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியின் சார்பில் ஈரோடு பவானி சட்டமன்றத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த தேர்தல் தோல்விக்கு பின் சிவாஜி கணேசன் தனது கட்சியை அன்றைய பிரதமர் வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்தார்.
மீண்டும் காங்கிரஸில் ஐக்கியம்
ஆனால், இளங்கோவன் அதில் இருந்து பிரிந்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் ஆனார். மேலும் அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான வாழப்பாடி ராமமூர்த்திக்கு ஆதரவாக இளங்கோவன் களமாடினார். அதன்பின்னர் ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அனுதாப அலையால் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. பிரதமராக நரசிம்ம ராவும், தமிழகத்தில் அதிமுக சார்பில் முதல்வராக ஜெயலலிதாவும் முதல் முறையாக பதவியேற்றனர்.
அப்போது ராஜீவ் காந்தி மரணத்திற்கு முழுமையான காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி திமுகவினரையும் அதன் அப்போதைய தலைவரான மு.கருணாநிதியும் இளங்கோவன் கடுமையாக விமர்சித்த காலம் அது.
மேலும் படிக்க | இளங்கோவன் மரண செய்தியில் சர்ச்சை! இறப்பிற்கு முன்னரே வெளியான இரங்கல் பதிவு..
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
அதன்பின், 1996 நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார்.
அத்தேர்தலின் தோல்விக்கு முன்பே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முன்னணி மூத்த தலைவர்களான மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, ப. சிதம்பரம் ஆகியோர் பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் கட்சியுடன் கருத்து முரண் ஏற்பட்டு தனி கட்சி துவங்கினர்.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் சீதாராம் கேசரி, ஈவிகேஎஸ் இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமித்தனர். இப்பதவியில் (1996–2001) ஆண்டு வரை மிகவும் திறம்பட செயல்பட்டார்.
மேலும் அப்போது நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது. அப்போது, மூப்பனாரின் தமாகா அக்கூட்டணியில் இணைந்ததால் தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய இளங்கோவன், அப்பதவியை மூப்பனாருக்கு விட்டு கொடுத்தார்.
கருணாநிதி, ஜெயலலிதா - எதிர்ப்பும், சர்ச்சையும்
2004 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதலும் கடைசியுமாக மக்களவை உறுப்பினராக தேர்வானார். அந்த காலகட்டத்தில் 2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
அந்த காலகட்டத்தில் திமுக - காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணியில் இருந்தாலும், மத்திய அமைச்சராக இருந்த ஈவிகேஎஸ் சம்பத் திமுகவையும், கருணாநிதியையும் விமர்சனம் செய்வதை மட்டும் நிறுத்தவே இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக தரப்பில் தக்க மரியாதை தராததாகக் கூறி மு. கருணாநிதியை அவரது சாதியின் பெயரோடு விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
2006 சட்டப்பேரவை திமுக வெற்றி பெற்ற போதிலும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் தயவில்தான் திமுக ஆட்சி செய்வதாகவும் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் ஆட்சியை திறனற்ற ஆட்சி என்று கூறி கூட்டணி கட்சி என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்து வந்தார். மறுபுறம், மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவளனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மறுபுறம் தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கருணாநிதி எதிர்ப்பை தனது அரசியல் ஆயுதமாக கையில் எடுத்தார். இதற்காக, விஜயகாந்தை பாராட்டித் தள்ளிய இளங்கோவன், அவரது வீட்டுக்கேச் சென்று இனிப்புக் கொடுத்த சம்பவமும் இங்கு குறிப்பிடத்தக்கது. சில கருத்து முரண் காரணமாக ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.
இளையராஜா சர்ச்சை
"வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாதபோது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வது என்ன நியாயம்" என இளையராஜா குறித்து ஈவிகேஎஸ் சம்பத் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவை தான் சாதி ரீதியாக விமர்சிக்கவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் விளக்கமளித்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர் தேர்தல் தோல்விகள்
தொடர்ந்து, 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், 2014 நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும் அடுத்தடுத்து தோல்வியை தழுவினார். தமிழ்நாட்டின் இருபெருந்தலைவர்களாக விளங்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அரசியல் நாகரிகம் இன்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசினார் என்றும் தமிழக மக்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியதால்தான் இளங்கோவன் இரண்டு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார் என்று அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
2014–2017 காலகட்டத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து, 2016 சட்டப்பேரவை தேர்தல் காலத்தில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி உடன் இணைத்து தவறாக பேசியதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. 41 தொகுதிகளில் போட்டியிட்டு காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டும் அவரை தோல்வியையே சந்தித்தார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் அசூர வெற்றி பெற்ற நிலையில், அங்கு மட்டுமே தோல்வியை சந்தித்தது என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
39 ஆண்டுகளுக்கு பின் எம்எல்ஏ
அதன் பிறகு, 2023ஆம் ஆண்டில் அவரது மூத்த மகனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமாக இருந்த திருமகன் ஈவெரா நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இதனால், அவரது ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். அவர் போட்டியிட மறுப்பு தெரிவித்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டும் காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற வேட்பாளராக இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வானார். தற்போது எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்திலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மூச்சை நிறுத்தியுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பெயர் நிச்சயம் நிலைப்பெற்றிருக்கும் எனலாம்.
மேலும் படிக்க | ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்... மருத்துவமனை செல்லும் ஸ்டாலின்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ