)
Thirumavalavan About Jagdeep Dhankhar: குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், வேட்புமனுவை தாக்கல் செய்ய நாளை (ஆகஸ்ட் 25) கடைசி நாள் ஆகும். இதன்பின் போட்டியாளர்கள் உறுதிசெய்யப்படுவார்கள்.
வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் நடைபெறும், அன்றே தேர்தல் முடிவுகளும் தெரியவரும். இதையொட்டி, இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று (ஆகஸ்ட் 24) சென்னைக்கு வருகை தந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரினார். இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு பின், விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்திய எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற நீதியரசர் சுதர்சன் ரெட்டி சென்னைக்கு வருகை தந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரினார்.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதி அரசர் சுதர்சன் ரெட்டியை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் அவரது பங்களிப்பு குறித்தும் விரிவாக பேசினார். மேலும், வேட்பாளர் சுதர்சன் ரெட்டியும் கடந்த காலத்தில் நீதித்துறையில் அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பு கூறுகளை பாதுகாப்பதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். 'அரசமைப்பு சட்டம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, அதனை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஆகவே இந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த கடமைகளை செவ்வனே ஆற்றுவேன்' என்ற உறுதியை வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அளித்தார்.
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில்... pic.twitter.com/LJWtE4eXry
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 24, 2025
தமிழ்நாட்டை பொறுத்தவரை முழுமையாக அவருக்கு வாக்குகள் கிடைக்கும். மாநிலம், மொழி என்கிற அடையாளங்களை தாண்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த காலத்தில் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கரை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து மேலும் அவரை அச்சுறுத்தி வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். குடியரசு துணைத் தலைவருக்கே இந்த நிலை என்று சொன்னால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலை என்ன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட நிலைதான் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே பாரதிய ஜனதாவின் கட்டுக்குள் முடங்கிப் போகக்கூடிய ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதை விட சுதந்திரமாக சிந்தித்து செயல்படவும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் பணியாற்றவும் வாய்ப்பை பெற்றுள்ள வல்லமை பெற்றுள்ள வேட்பாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம்.
இந்த அரசு பாஜக பாசிச அரசு என்பதற்கு ஜெக்தீப் தன்கர் அவர்களுக்கு கொடுத்த நெருக்கடியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். பாசிச சக்திகளை மக்களிடையே அம்பலப்படுத்தவும் வீழ்த்தவும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று நம்புவோம். தேசிய அளவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு வாக்களிக்க வேண்டும். சுதர்சன் ரெட்டி அவர்களை குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சார்ந்த எவரும் இதுவரை மொழி அடையாளத்தை உயர்த்திப் பிடித்தது இல்லை. தங்களை தமிழர்கள் என்று அவர்கள் ஒருபோதும் பேசியது இல்லை. பெருமைப்படுத்தி கொண்டதும் இல்லை. தேர்தலுக்காக இந்த முகமூடியை அணிந்து வருகிறார்கள். தனிநபர்கள் என்பதை தாண்டி தத்துவம் மேலானது. அந்த அடிப்படையில் தான் குடியரசுத் துணை தலைவருக்கான தேர்தலை நாம் அணுக வேண்டும் என்று முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார், அந்த கருத்தை விசிக வழிமொழிகிறது" என்றார்.
மேலும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த கேள்விக்கு, "ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அரசு அனுமதி மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே கடந்த காலங்களில் போராட்டங்கள் நடந்தி இருப்பதை நாம் அறிவோம். மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசு அந்த திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது" என்றார்.
தொடர்ந்து, ஜெக்தீப் தன்கர் குறித்து பேசிய திருமா, "குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தங்கி உள்ள இல்லத்தை சுற்றிலும் ராணுவப்படைகள் சூழ்ந்து இருக்கிறார்கள். வெளி உலக தொடர்பே இல்லாத அளவிற்கு அவரை முடக்கி வைத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பாசிச நடவடிக்கை. அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இதனை கண்டிக்க முன்வர வேண்டும். எந்தக் கருத்தையும் ஜெக்தீப் தன்கர் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது கவலை இருக்கிறது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ