)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லாக்கு சாலை முதல் தெரு பகுதியில் முத்துக்குமார் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இன்று (அக்டோபர் 20) தீபாவளி பண்டிகை என்பதால் அப்பகுதியில் சிலர் பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்போது பட்டாசு வெடிக்கும்போது அதிலிருந்து வெளியேறிய தீ பொறியானது தீப்பெட்டி ஆலையின் பின்புறம் உள்ள குடோன் பகுதியில் விழுந்துள்ளது.
இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த மருந்து குச்சியில் தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. குடோன் முழுவதும் பரவி எரிய தொடங்கியதால் வானளவிற்கு கரும்புகை எழுந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோனுக்குள் தீ பற்றி எரிந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனை தொடர்ந்து குடோனின் மேல்பகுதி மற்றும் பின்புறம் பகுதிகளை உடைத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி மூலப்பொருட்கள், தீ மருந்து குச்சிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகள் நெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வரும் தீப்பெட்டி ஆலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் எழுந்த புகையினால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ