)
Nalam Kakkum Stalin Thittam, Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதியான இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 38 மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம்
ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்குக் குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
யாருக்கு முன்னுரிமை?
இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினர் அதிகம்வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக- பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளன.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாம் எப்போது நடக்கும்? எங்கு நடக்கும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி / கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?
இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை, சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா, கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.
அனைத்துப் பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளது. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே (X-Ray), எக்கோகார்டியோகிராம் (Echocardiogram), அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (USG) மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் (ம) மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளன.
மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள்
இம்முகாமில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்குக் கீழ்க்கண்ட மருத்துச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளன.
- பொது மருத்துவம்,
- பொது அறுவை சிகிச்சை மருத்துவம்,
- இருதய மருத்துவம்,
- எலும்பியல் மருத்துவம்,
- நரம்பியல் மருத்துவம்,
- தோல் மருத்துவம்,
- காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்,
- மகப்பேறு மருத்துவம்,
- இயன்முறை மருத்துவம்,
- பல் மருத்துவம்,
- கண் மருத்துவம்,
- மனநல மருத்துவம்
- குழந்தைகள் நல மருத்துவம்
- நுரையீரல் மருத்துவம்
- நீரிழிவு நோய் மருத்துவம்
- கதிரியக்கவியல் மருத்துவம்
மேற்சொன்ன பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள், நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) வாயிலாகக் கண்காணிக்கப்பட உள்ளன.
இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு, பெண்களுக்கான கருப்பை வாய்ப்புற்று மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறுசிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை(HMIS 3.0) மூலம் கண்காணிக்கப்படும் இம்முழு உடல்பரிசோதனை முகாமானது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே வழங்கப்படுகின்றன. இதன் மூலமாக உயர்தரமான மருத்துவச் சேவைகள் பொதுமக்களுக்கு அவர்கள் வாழுமிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க இருக்கின்றன.
இந்த முகாமை அனைத்து பொதுமக்களும், குறிப்பாக "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் நடத்தப்படும் முதற்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ