)
Kashi Free spiritual trip : தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை மூத்த குடிமக்களை இலவசமாக ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மீக பயணம் அழைத்து செல்ல உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 600 பேர் தேர்வு செய்யப்பட்டு பயண செலவுகள் ஏதும் பெறாமல் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். எனவே, இந்த பயணத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ; 2025-2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பின்படி, இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 600 பக்தர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்களை தமது முகவரி அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்து சமய அநிலையத்துறை இணைய தளத்திலிருந்து www.hrce.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்
1. காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
2.விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும்.
3. விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் 2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும்
4. காசி ஆன்மிகப் பயணம் (10 நாட்கள்) சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவர்களின் (Civil Surgeon) சான்று இணைக்கப்பட வேண்டும்.
5. விண்ணப்பதாரர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும்.
6. ஆதார்கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (PAN Card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
7. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவர்.
8. ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை தமது இருப்பிடம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இந்து சமய அநிலையத்துறை இணைய தளத்திலிருந்து www.hrce.tn.gov.n பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9. விண்ணப்பதாரர்கள் தமது வசிப்பிடம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வேறு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
10. இந்து சமய அறநிலையத்துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 30 விண்ணப்பதாரர்கள் வீதம், 20 இணை ஆணையர் மண்டலத்திலிருந்து 600 விண்ணப்பதாரர்கள் மட்டும் மண்டல இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர். மண்டல இணை ஆணையரின் முடிவே இறுதியானது.
11. வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் 600-க்கு மேல் இருப்பின் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் 600 விண்ணப்பதார்களையும், ஒரே பயணமாக அல்லாமல் 10 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போதும், ஒவ்வொரு பயணத்திற்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர்.
12.விண்ணப்பதாரரின் கணவரோ / மனைவியோ (spouse) விண்ணப்பித்திருந்தால், அதன் விபரத்தினை தமது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
13.பத்து நாட்கள் பயணத்திற்கு, பக்தர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்களுடன் எடுத்துவர வேண்டும்.
14.ஆன்மிகப் பயணத்தின்போது மிக விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்க்கவும்.
15.ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பயண நாளுக்கு முதல் நாளே தமது சொந்தப் பொறுப்பில் இராமேசுவரம் வந்து திருக்கோயில் அலுவலகத்தில் தமது வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறே இராமேசுவரத்தில் ஆன்மிக பயணம் நிறைவு செய்தவுடன் தமது சொந்த செலவில் அவரவர் இருப்பிடம் திரும்ப வேண்டும்.
16.இராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடித்து மீண்டும் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமியை வழிபட்ட பின்னரே நிறைவு பெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22.10.2025
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி - இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை
ராமேஸ்வரம் டூ காசி இலவச ஆன்மீக பயணத்துக்கான விண்ணப்பம் (இங்கே கிளிக் செய்யவும்)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ