TET தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு நற்செய்தியாக, 2026ஆம் ஆண்டில் மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுகளை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் பணி பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் இருந்த சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சீராய்வு மனு
இந்த உத்தரவை அமல்படுத்தாததால், தமிழகத்தில் பணியில் உள்ள பல ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியானது. சமீபத்தில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமையான தீர்ப்பை வழங்கியது. செப்டம்பர் 1, 2025 முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது, அது தற்போது நிலுவையில் உள்ளது.
தமிழக அரசின் நடவடிக்கை
- உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கவும், தமிழக அரசு சிறப்பு தேர்வுக்கான முடிவை எடுத்துள்ளது.
- பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக மட்டும், 2026ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும்.
- இந்த சிறப்பு தேர்வுகளை நடத்துவதற்கான அனுமதியை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.
- இந்த தேர்வுகளுக்கு ஆசிரியர்களை தயார்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் மாவட்ட அளவில் சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
- 2026-ம் ஆண்டில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, தேவைப்பட்டால் 2027-ம் ஆண்டிலும் சிறப்பு டெட் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு விலக்கு?
இந்த உத்தரவில் சிலருக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள ஆசிரியர்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமலேயே ஓய்வு வயது வரை பணியில் தொடரலாம். ஆனால், அவர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கடைபிடிப்பதையும், அதே சமயம் பல ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இந்த மூன்று வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தங்கள் பணியை தொடர்ந்து, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









