Haseena Syed: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவரான ஹசீனா சையத் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

Haseena Syed Left Congress: தமிழ்நாடு மகிளா (மகளிர்) காங்கிரஸ் தலைவரான ஹசீனா சையத்தை, பதவியில் இருந்து கட்சியின் தலைமை நீக்கிய சில நிமிடங்களிலேயே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் ஹசீனா சையத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கும், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிக்காததை தொடர்ந்து, கட்சியின் தலைமையின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹசீனா சையத் முன்வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஹசினா சையத் நீக்கப்பட்டார். கட்சியின் ஒழுங்கு மற்றும் உண்மைத்தன்மையை காக்க இந்த முடிவு என அகில் இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அல்கா லம்பா உள்ளிட்ட பலரையும் குறிப்பிட்டு, ஹசீனா சையத் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர் தேர்வின் செயல்முறையின்போது, தனக்கு ஏற்பட்ட அவமானங்களை தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் 2 பெண் வேட்பாளர்களையும் மட்டுமே காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. வெறும் 7.14% தான் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என காங்கிரஸின் மத்திய தேர்தல் குழுவின் (CEC) முடிவு மற்றும் தஙகளின் வலியுறுத்தல் இருந்தபோதிலும், இந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டுள்ளது என்று ஹசீனா அந்த கடிதத்தில் ராகுல் காந்தியை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். மேலும், வேட்பாளர் தேர்வில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னை அவமானப்படுத்தியது மட்டுமின்றி கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் தங்களின் (ராகுல் காந்தி) கனவான 33 சதவீத பெண்கள் இடஒதுக்கீடு என்பது வெறும் பேச்சாகவே சுருங்கிவிட்டது என்றும் தன்னைப் போன்ற தகுதியுள்ள பெண்களுக்கும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த வேறு சிலருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். தங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மகளிர் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், தலைமை தனக்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்க் அவர்களிடம் தீவிரமாக முறையிட்டேன் என்றும் தெரிவித்தார். ஆனால், வழக்கம்போல் அனைத்தும் வீணாகிவிட்டது என்றும் ஊழல் மலிந்த செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர், ஜார்க்கண்ட் பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழக பொறுப்பாளர்), மயிலாடுதுறை எம்.பி., சுதா, வெளிநாடு வாழ் காங்கிரஸ் பிரிவு சாம் பிட்ரோடா உடன் தொடர்புடைய புஷ்பராஜ் மற்றும் தற்போதைய தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா ஆகியோரின் உளநோக்கங்களுக்கே கார்கே துணை நிற்பதாக குற்றஞ்சாட்டினார்.
மகளிரணி நிர்வாகிகளுக்கு 33% மகளிர் இடஒதுக்கீட்டு உரிமையை என்னால் எவ்வாறு பெற்றுத் தர முடியும் என்றும் எனவே தன்னால் இப்பதவியில் நீடிக்க முடியாது என கருதி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதேநேரத்தில், காந்தி குடும்பத்தினர் மீதும், கட்சியின் மீதும் என்றும் அன்புடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ராகுல் காந்தியை நோக்கி கேள்வியும் எழுப்பி உள்ளார், அதாவது தேசிய தலைவர், எப்படி மாநிலத் தலைவரின் ஊழல் முறைகேடுகளுக்கு இவ்வளவு தூரம் ஆதரவாக இருக்கிறார்...? இதனால் கட்சியின் உண்மையான தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு மிகவும் சீர் செய்ய முடியாத நிலைக்கு சென்றுவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, சென்னை கோயம்பேட்டில் ஹசீனா சையத், மகளிரணி நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அதில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கமிட்டி தரப்பில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கருப்பு உடை அணிந்து மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அதில் ஹசீனா சையத், "காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு 33 சதவிகித பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளது. கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடுவதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தேன், ஆனால் காங்கிரஸ் கமிட்டி தரப்பில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. ஶ்ரீ வல்ல பிரசாத், எம்.பி சுதா பேச்சை கேட்டு எனக்கு கொடுக்கப்பட்ட சீட்டை தடுத்துவிட்டார்கள்.
புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சீட் கொடுக்கவில்லை. 30 ஆண்டுகளாக மாணவர் பருவத்தில் இருந்து உழைக்கிறேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அந்தமான் தீவு உள்ளிட்ட தீவுகளில் உழைத்து உள்ளேன். அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. எத்தனை நாள்தான் நாங்கள் வாய் மூடி மௌனமாக இருப்பது. எங்களுக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம், இதற்கு மாநில தலைவர் பதில் சொல்லியாக வேண்டும்.
33 சதவீதம் இட ஒதுக்கீடு படி, 28 இடங்களில் 9 இடங்கள் எங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். எதற்காக எங்களுக்கு துரோகம் செய்துள்ளீர்கள். தொடர்ச்சியாக நானும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸும் வஞ்சிக்கப்படுகிறது. ஏற்கனவே மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடம் கொடுப்பதில்லை. நிகழ்வுகள் நடக்கும்போது பெயரை குறிப்பிடுவதில்லை. நான் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த என்பதால் இப்படி செய்கிறீர்களா? தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு?, உருது பேசும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த 5ஆம் தேதி எனக்கு போன் செய்து மேலூர் தொகுதியில் உனக்கு சீட் வழங்க போகிறோம் என்று சொன்னார். ஆவணங்கள் எல்லாம் தயார் செய்ய சொன்னார்கள். நானும் தயார் செய்தேன். ஆனால் மாற்றி ஒருவருக்கு அறிவித்தார்கள். கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு நன்றி. இரவு 12 மணியளவில் கார்த்திக் சிதம்பரம் என் சீட்டுக்காக பிரியங்கா காந்தியிடம் சண்டை போடுகிறார்.
பட்டியலினத்தவர்களை வரவேற்கிறோம். 6 தனி தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு தொகுதியை கூட ரஞ்சன் குமார் அவர்களுக்கு கொடுக்கவில்லை. தேசிய தலைவரும், மாநில தலைவரும் சேர்ந்து எங்களுக்கு துரோகம் செய்துள்ளார்கள். நாங்களே பதவியை ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு தான் வந்துள்ளோம். டெல்லியில் இருந்துதான் எனக்கு அழைப்பு வருகிறது, இதுவரை மாநில தலைவர் பதில் சொல்லவில்லை. நான் கட்சியை விட்டு செல்ல தயாராக உள்ளேன்" என பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ