அதி கனமழைக்கு வாய்ப்பு... இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு வருமா?
Tamil Nadu Rain Weather Updates: சென்னை வானிலை ஆய்வு மையம், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் ஆகியோர் நாளை தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Rain Weather Latest News Updates: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (டிச. 10) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச. 11) காலை 8.30 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.
இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை (டிச. 12) பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என தெரிவித்திருக்கிறது.
23 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி என 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி' புயலாக மாறுமா? - பாலசந்திரன் சொன்னது என்ன?
இதையொட்டி, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன் இன்று மாலை 6.18 மணிக்கு அவரது X பதிவில்,"வடஇலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்ககடலில் நிலவிய நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருந்து விலகி, தெற்கு டெல்டா கடல் பகுதியான பாக் நீர் இணைப்பு நோக்கி நகர்ந்துள்ளது" என தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், வட இலங்கை நிலப்பரப்பு ஊடுருவல் காரணமாக மேகங்கள் கடந்த சில மணி நேரங்களாக வலுவிழந்து காணப்பட்டதாகவும், வரக்கூடிய மணி நேரத்தில் மேகக்கூட்டங்கள் உருவாக துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், இன்றிரவு மழை படிப்படியாக தீவிரமடையும் என தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
குறிப்பாக இன்று (டிச. 11) இரவு 7 மணி முதல் நாளை (டிச.12) இரவு 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பதிவாகும் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியில் விட்டு விட்டு கனமழையையும் எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் உள்மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகரிக்ககூடும் என அவர் கணித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறையா...?
எனவே, நாளை டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (School Colleges Leave) அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தாலும் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், கனமழை எச்சரிக்கை வந்திருப்பது பெற்றோர், ஆசிரியர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், நாளை காலை மழை நிலவரத்தை அடிப்படையாக வைத்தே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிகிறது.
மேலும் படிக்க | அடுத்த 2 நாட்களுக்கு இந்த பகுதிகளில் பலத்த மழை இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ