)
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில், நாளை வியாழக்கிழமை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த பார்களும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி காலை முதல் இரவு வரை மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவை மீறி யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநாடு நடைபெறும் இடமான பாரபத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், விரிவான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டு பகுதிக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக தனிப்பட்ட பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டு, அங்கு செல்லும் வழித்தடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் நாளில், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வரும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அமைதியை பேணி, காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்த்து, கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவதால், அதனை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிக்க, கட்சி நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ