)
Tamil Nadu Government, Registration Department : பத்திரப்பதிவு முதல் திருமணப்பதிவு வரை பலவற்றுக்கும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பலரும் ஏறி இறங்கியிருப்பீர்கள். ஆனால், அந்த சார் பதிவாளருக்கான பணிகள் என்ன, அவரை யார் கண்காணிக்கிறார், மோசடிகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதனால் இதுதொடர்பான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவுத்துறையில் முகாம் அலுவலகங்களையும் உள்ளடக்கி 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. முகாம் அலுவலகங்களுக்கு பிரதான சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்று ஆவணப்பதிவு மேற்கொள்கின்றனர்.
சார்பதிவாளர்களின் பணிகள்
1. பதிவுச்சட்டம், 1908-இன் கீழ் ஆவணங்களைப் பதிவு செய்தல்.
2. இந்து திருமணச் சட்டம், 1955 மற்றும் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009-இன் கீழ் திருமணங்களைப் பதிவு செய்தல்.
3. சிறப்புத் திருமணச் சட்டம், 1954-இன் கீழ் திருமணங்களை நடத்தி வைத்தல்.
4. வில்லங்க சான்றுகள் மற்றும் ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை வழங்குதல்.
5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பாதுகாத்தல் மற்றும் வடிப்புகளை வழங்குதல்.
பதிவுத்துறை பயிற்சி நிலையம்
புதிய பணியாளர்களுக்கு பயிற்சியும் ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு துறையால் நிர்வகிக்கப்படும் பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து புத்தாக்கப் பயிற்சியும் அளிக்கும் பொருட்டு 1996-இல் பதிவுத்துறை பயிற்சி நிலையம் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு பயிற்சியில் பங்குபெறும் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி வசதியுடனான இப்பயிற்சி நிலையம் துணை பதிவுத்துறை தலைவர் நிலையில் உள்ள இயக்குனரின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த துறையில் புதிதாக பணியில் சேருபவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்
மாவட்டப்பதிவாளர் (தணிக்கை)
சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை நூறு சதவிகிதம் தணிக்கை செய்வதற்காக மாவட்டப்பதிவாளர் (தணிக்கை) தலைமையில் உள்தணிக்கைப் பிரிவானது துறையில் செயல்படுகிறது. இத்தணிக்கைப் பிரிவானது, பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து வருவாய் கசிவு மற்றும் விதிமுறை மீறல்கள் உள்ளதா என சரிபார்க்கிறது. எந்தவொரு வருவாய் இழப்பும் கவனத்திற்கு வராமல் இருப்பதைத் தவிர்ப்பதோடு வருவாய் கசிவினைத் தடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் உள்தணிக்கைப் பிரிவு மேற்கொள்கிறது.
பதிவுத்துறையில் மொத்தம் 49 தணிக்கை பிரிவுகள் செயல்படுகின்றன. இழப்புகள் கண்டறியப்பட்டால் அதனை வசூல் செய்ய இந்திய முத்திரைச் சட்டம், 1899, பிரிவுகள் 33(A), 47A(3) மற்றும் பதிவுச்சட்டம், 1908, பிரிவு 80(A)-இன் கீழான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், வில்லங்க சான்றில் குறிப்பு செய்யப்படுவதன் மூலம் குறைவுத் தொகை வசூலிக்கப்படும் வரை தொடர் பதிவுகள் தடை செய்யப்படுகின்றன. தணிக்கை மாவட்டப்பதிவாளரது பணியை தொடர்புடைய துணை பதிவுத்துறை தலைவர் கண்காணிக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ