)
தமிழ்நாடு அரசு மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என அனைவரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உணவு டெலிவரி, மளிகை பொருட்கள் டெலிவரி, பைக் டாக்ஸி போன்ற இணைய வழி சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மானிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் பெருகி வரும் இணையம் சார்ந்த வர்த்தக சேவைகளில், இருசக்கர வாகனங்களை நம்பிபணியாற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வாகன பராமரிப்புச் செலவுகளை குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கவும், பொருளாதார ரீதியாகபின்தங்கியுள்ள டெலிவரி பணியாளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20,000 மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2000 உறுப்பினர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். தமிழக அரசின் இந்த மானியத்தை பெற, விண்ணப்பதாரர் பின்வரும் முக்கிய தகுதியை பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். உணவு டெலிவரி, மளிகை பொருட்கள் டெலிவரி, பைக் டாக்ஸி போன்ற ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர்களை பெற்று சேவை வழங்கும் தொழிலாளராக இருக்க வேண்டும்.
மானியம் பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறை இரண்டு படிகளை கொண்டது. முதலில் நலவாரியத்தில் உறுப்பினராகி, பின்னர் மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
நலவாரியத்தில் உறுப்பினராவது எப்படி?
`https://tnuwwb.tn.gov.in/` என்ற தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள புதிய விண்ணப்பப் பதிவு என்ற இணைப்பை சொடுக்கவும். உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, பெறப்பட்ட OTP மூலம் உள்நுழையவும். உங்களின் தனிப்பட்ட விவரங்கள், முகவரி, பணி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும். தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பம் தொழிலாளர் உதவி ஆணையரால் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு நிரந்தரப் பதிவு எண் அனுப்பப்படும். இதை பயன்படுத்தி உங்கள் நலவாரிய உறுப்பினர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மானியத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
நலவாரியத்தில் உறுப்பினரான பிறகு, மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். `https://tnuwwb.tn.gov.in/` இணையதளத்திற்கு சென்று, முகப்பு பக்கத்தில் உள்ள "Subsidy for eScooter" என்ற இணைப்பை கிளிக் செய்யவும். நலவாரியம் வழங்கிய உங்களின் நிரந்தர பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் நலவாரிய உறுப்பினர் மற்றும் மானிய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ