)
Kalaignar Magalir Urimai Thogai : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பத்திருக்கிறீர்கள் என்றால், அரசு உங்களின் விண்ணப்பங்களை எப்படி பரிசீலிக்கும் என்பதை அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், ஒரு விண்ணப்பத்தை பல வழிகளில் ஆய்வு செய்த பிறகே மகளிர் உரிமைத் தொகை பயனாளியாக அரசு சேர்க்கும். எல்லா விதிமுறைகளையும் சரியாக பூர்த்தி செய்கிறீர்களா என்பதை நேரடி கள ஆய்வில் தொடங்கி, வங்கி கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றையும் ஆய்வு செய்த பிறகே தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பரிசீலனை
ரேஷன் கார்டு விண்ணப்பத்தைப் போலே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, குறிப்பிட்ட தேதிக்குள் கொடுக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களையே அரசு முதலில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு பல்வேறு கட்டங்களாக விண்ணப்ப பரிசீலனையை முடித்து, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் கொடுக்கும். அதேமுறையிலேயே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பரிசீலனையும் நடக்கும்.குறிப்பிட்ட தேதிவரை காலக்கெடு நிர்ணயித்து அந்த தேதிக்குள் வந்த விண்ணப்பங்கள் மீது பரசீலனை நடைபெறும். அப்படியே பல கட்டங்களாக விண்ணப்ப பரிசீலனை நடக்கும்
விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்படும். அவர், அந்த கிராமத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் முகவரி, கொடுக்கப்பட்ட ஆவணங்கள் உண்மைதன்மையை உறுதி செய்வார். ஆண்டு வருமானம், நிலம் இருப்பு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு தகவல்கள் இங்கேயே உறுதி செய்யப்படும். வீட்டில் அரசு ஊழியர்கள் இருக்கிறார்களா?, ஓய்வூதியதாரர்கள் குறித்த தகவல் எல்லாம் இங்கேயே விசாரித்து உறுதி செய்யப்படும்.அதன் பின்னர் அடுத்தக்கட்டமாக வங்கி கணக்கு எண், ஆதார் எண்ணை வைத்து வாகனங்கள் ஏதேனும் இருக்கிறதா உள்ளிட்ட பிற தகவல்கள் உறுதி செய்யப்படும்.
எப்போது ஒப்புதல் கொடுக்கப்படும்?
ரேஷன் கார்டைப் பொறுத்தவரை குறிபிட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்து அவர்களுக்கு கார்டு கொடுத்த பிறகே அடுத்தக்கட்டமாக பரிசீலனை தொடங்கும். ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பொறுத்தவரை பகுதி பகுதியாக பரிசீலனை நடந்தாலும் பயனாளிகள் சேர்ப்பு என்பது ஒரே முறையில் நடந்து, ஒட்டுமொத்த பயனாளிகளுக்கும் ஒரே கட்டமாக பணம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
அந்தவகையில் பார்க்கும்போது, புதிய விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் பரிசீலனை பல்வேறு கட்டங்களாக நடத்தி முடித்து ஒட்டுமொத்தமாக புதிதாக எத்தனை பயனாளிகள் சேர்க்கப்படுகிறார்களோ, அவர்களுக்கு இதற்கு முன்பு ஏற்கனவே பயனாளிகளாக இருப்பவர்களுடன் சேர்த்து மாதம் ரூ.1000 அரசு விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது ரூ.1000 கிடைக்கும்?
தமிழ்நாடு முழுவதும் புதிதாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது பல கட்டங்களாக விசாரணை நடத்தி முடித்த பிறகு. குறிப்பிட்ட பயனாளிகளை அரசு இறுதி செய்யும். அதன்பிறகு அந்த பயனாளிகளுக்கு ஆகும் செலவீனம் கணக்கிடப்பட்டு, நிதி ஒதுக்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதுதொடர்பான செயல்முறைகளுக்கு எல்லாம் முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்தபிறகு எந்த தேதியில் இருந்து புதிய பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் விடுவிக்கலாம் என்பதை அரசு முடிவெடுத்து தேதியை அறிவிக்கும்.
அதன்பின்னர், மாதம் மாதம் புதிய பயனாளிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தவகையில் பார்க்கும்போது இப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்த்து, ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்ற முடிவை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ