)
ஒரு குழந்தை பிறந்த பிறகு, அதன் எதிர்காலத்திற்கான மிக முக்கிய ஆவணமாக இருப்பது பிறப்பு சான்றிதழ் ஆகும். பள்ளிச் சேர்க்கை தொடங்கி பாஸ்போர்ட் பெறுவது, ஆதார் அட்டை எடுப்பது முதல் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமானதாகும். இந்திய சட்டப்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் பிறப்பு சான்றிதழ் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழை பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பிறப்பு சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. உங்கள் குழந்தை அரசு மருத்துவமனையில் பிறந்திருந்தால், பெரும்பாலும் மருத்துவமனை நிர்வாகமே பிறப்பு பதிவு நடைமுறைகளை தொடங்கிவிடும். ஆனால், தனியார் மருத்துவமனையில் பிறந்திருந்தால், பெற்றோரே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப முறை
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பிறப்பு சான்றிதழுக்கு ஆன்லைனிலேயே எளிதாக விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாநில அரசும் பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்வதற்கெனத் தனித்துவமான ஆன்லைன் போர்ட்டலை கொண்டுள்ளது. உங்கள் மாநிலத்திற்கான அல்லது நகராட்சிக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை தொடங்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சில முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததற்கான மருத்துவமனைச் சான்று, பெற்றோரின் ஆதார் அட்டைகள், பெற்றோரின் திருமண சான்றிதழ் ஆகியவை அவசியம். ஆன்லைன் படிவத்தை நிரப்பி, ஆவணங்களை பதிவேற்றிய பிறகு, 7 முதல் 8 வேலை நாட்களுக்குள் டிஜிட்டல் சான்றிதழ் தயாராகிவிடும்.
ஆப்லைன் விண்ணப்ப முறை
21 நாள் காலக்கெடுவை தவறவிட்டவர்கள் அல்லது ஆன்லைன் சேவையை பயன்படுத்த விரும்பாதவர்கள், ஆப்லைன் முறையைத் தேர்வு செய்யலாம். உங்கள் பகுதிக்குட்பட்ட நகராட்சி அலுவலகம், மாநகராட்சி அல்லது கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும். பிறப்பு பதிவுக்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்று, அதை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பொதுவாக ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும்.
கவனிக்க வேண்டியவை
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்வது, செயல்முறையை மிகவும் எளிதாக்கும். தாமதம் ஏற்பட்டால், கூடுதல் சரிபார்ப்புகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒப்புதல் தேவைப்படலாம், இது கால தாமதத்தை ஏற்படுத்தும். விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் வழங்கும் தகவல்கள், மருத்துவமனை பதிவேடுகளில் உள்ள தகவல்களுடன் சரியாக பொருந்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிறப்பு சான்றிதழ் என்பது உங்கள் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் ஒரு அடிப்படை ஆவணமாகும். எனவே, அதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ