)
Tamilnadu SIR Updates: தமிழ்நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று (நவ. 27) வெளியிட்டுள்ளது. அதில், 2002/2005 பட்டியலில் பெயர் கண்டறிய முடியாதவர்கள் மற்ற விவரங்களை நிரப்பி தர தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்பு தீவிர திருத்த பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த கணக்கெடுப்பு கட்டத்தில், தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களால் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க டிசம்பர் 4ஆம் தேதிவரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடனே சமர்ப்பிக்குமாறு" தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2 லட்சத்து 44 ஆயிரத்து 685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு 50 கணக்கீட்டு படிவங்களுக்கு மிகாமல் உறுதிமொழியுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சிறப்பு தீவிர திருத்த நடைமுறையின் பங்கேற்பாளர்களின் நலனுக்காக முக்கிய தகவல்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை கீழ் வருமாறு:
- 2002/2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயர் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
- டிசம்பர் 4ஆம் தேதிக்குள் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காதபட்சத்தில், அவ்வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
- மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
- வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
- உரிமை கோரல் மற்றும் மறுப்புரை (Claims and Objections) காலம் டிசம்பர் 9ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
- அறிவிப்புக் கட்டம் (Notice Phase) டிசம்பர் 9ஆம் தேதி முதல் அடுத்த 2026ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அவ்வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும்.
- வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரையில் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அன்று வெளியிடப்படும்.
எனவே, வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதில் முழு ஒத்துழைப்பையும் வழங்கி இந்த ஜனநாயக செயல்பாட்டில் தங்கள் பங்களிப்பினை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ