)
Tamil Nadu Bus Fare Hike: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், வலைதளங்களிலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு என்ற ஒரு செய்தி பரவலாக வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தி முற்றிலும் தவறானது.
Bus Fare Details: கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவது ஏன்?
தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். அப்படி நீதிமன்றத்தை அவர்கள் நாடி இருக்கின்ற நேரத்தில் நீதிமன்றம் இதுகுறித்து மக்களுடைய கருத்தை கேட்டு ஒரு தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறது.
அந்த அடிப்படையில் மக்களுடைய கருத்து கேட்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தனியார் பேருந்து உரிமையாளருடைய வழக்கின் அடிப்படையில் அவருடைய பேருந்துக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று இந்த கோரிக்கையை நீதிமன்றத்திற்கு வந்திருக்கின்ற காரணத்தினால், நீதிமன்ற நடவடிக்கையினால் தான் இந்த கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. அரசை பொருத்தவரை இந்த கூட்டத்தை நடத்தவில்லை, அரசினுடைய நிலைப்பாடு கடந்த காலங்களில் பலமுறை மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
Bus Fare Details: மக்கள் மீது சுமை இருக்கக்கூடாது...
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றார்கள். ஏற்கனவே சில முறை இதுபோன்று பேருந்து கட்டணம் உயர்வு என்ற தகவல் வந்தபோது கூட ஒரு காலத்திலும் பேருந்து கட்டணம் உயர்வு இருக்காது, நம்முடைய தமிழ்நாட்டில் போக்குவரத்து துறை பொருளாதார சிக்கலில் இருந்தாலும், ஒன்றிய அரசு டீசல் விலையை பலமுறை கூட்டி இருந்தாலும், அதனை ஒட்டி பேருந்து கட்டணம் இருக்காது என்று அறிவித்திருக்கிறார்.
இன்றைக்கு உலக அளவிலே டீசல், பெட்ரோல் விலை குறைந்திருந்தாலும் நம்முடைய இந்தியாவைப் பொருத்தவரை ஒன்றிய அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைக்கவில்லை. இருப்பினும் எந்த பாதிப்பும் பொதுமக்கள் மீது விழக்கூடாது, அந்த சுமை பொதுமக்கள் மீது ஏற்றக்கூடாது என்று தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசு பேருந்தில் கட்டண உயர்வு இருக்காது என்று ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்த சொல்லி இருக்கிறார்கள்.
Bus Fare Details: கட்டண உயர்வு இருக்காது...
நாங்களும் தெளிவுபடுத்திருக்கிறோம், மீண்டும் அதைதான் வலியுறுத்த விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கட்டணத்தை, பேருந்து கட்டணத்தை உயர்த்தாது என்று அறிவித்த காரணத்தினால் தான் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடி இருக்கிறார்கள். அந்த வழக்கின் அடிப்படையில் மக்களுடைய கருத்தை கேட்கக் சொல்லி நீதிமன்றம் அந்த அறிவுரையை வழங்கி இருக்கிறது.
எனவே அதன் அடிப்படையில் தான் இந்த கருத்து கேட்புக் கூட்டம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் என்றைக்கும் எந்த மாறுபாடும் இருக்காது. அந்த கருத்தை கேட்டு நீதிமன்றத்தில் தான் வழங்கப்படும். பொது மக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து தான் வலியுறுத்தப்படும். ஏற்கனவே மின்கட்டண உயர்வு இருக்கும் என்ற ஒரு செய்தி வந்தபோதும், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மின் கட்டண உயர்வு இருக்காது என்பதை தெளிவுபடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லியிருந்தார். எனவே, அதே வகையில் தான் பேருந்து கட்டணம் உயர்வும் நிச்சயமாக அரசு பேருந்து கட்டண உயர்வு இருக்காது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ