முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? அன்புமணி அட்டாக்!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி: மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 24, 2025, 01:12 PM IST
  • முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?
  • அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி
முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? அன்புமணி அட்டாக்!

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான் அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னை மாநகராட்சியால் கோரப்பட்டுள்ளன. இத்தகைய அப்பட்டமான விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

Add Zee News as a Preferred Source

அரசுத் துறைகளுக்காக ஏதேனும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், அதற்காக முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, குறைந்த தொகையில் தரமான கட்டுமானப் பணிகள் செய்து தருவதாக குறிப்பிட்டிருக்கும் தகுதியுடைய ஒப்பந்ததாரருக்குத் தான் குறிப்பிட்ட பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும். இது தான் விதியாகும்.

சென்னை மெரினா கடற்கரையில் மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தலா 11 பேர் அமரும் வசதி கொண்ட இரு மின்கல ஊர்திகள் கடந்த சில நாள்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்காக மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில்  வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில்,  ரூ.8.3 லட்சம்  செலவில் மின்கல ஊர்திகளுக்கான வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 20-ஆம் தேதி கோரப்பட்டுள்ளன. ஜூன் 23-ஆம் தேதி வரை பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணி செய்வதற்கான  ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இப்போது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டல அதிகாரியிடம் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியாளர் கேட்ட போது, அவரால் பதில் கூற முடியவில்லை. மீண்டும், மீண்டும் வினா எழுப்பப்பட்ட நிலையில், புதிதாக மேலும் இரு மின்கல ஊர்திகள் இயக்கப்படவிருப்பதாகவும், அவற்றுக்கான வாகன நிறுத்தம் கட்டுவதற்காகவே இந்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் பதிலளித்துள்ளார் அந்த அதிகாரி. 

அப்படியானால், ஏற்கனவே கட்டப்பட்ட வாகன நிறுத்துமிடம் எந்த அடிப்படையில் கட்டப்பட்டது? அதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படாதது ஏன்? அதைக் கட்டியவர் யார்? என்பன உள்ளிட்ட எந்த வினாவுக்கும் அந்த அதிகாரியிடம் பதில் இல்லை.  அதுபற்றி தாம் விசாரிப்பதாகக் கூறி அவர் நழுவிக் கொண்டதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரியின் விளக்கம் அனைத்தும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதை சமாளிப்பதற்கானவை தான் என்பதில் ஐயமில்லை.

பல லட்சம் பேர் கூடும் மெரினா கடற்கரையில் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இடத்தில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது என்பதும், அதை கட்டியவர்கள் யார்? என்பது தெரியாமலேயே அங்கு மின்கல ஊர்திகளை மாநகராட்சி பணியாளர்கள் நிறுத்துவதும்  திராவிட மாடல் ஆட்சியின் வினோதங்கள். அடுத்த சில நாட்களில் மாநகராட்சிக்கு தெரியாமலேயே , வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டதற்கான  தொகை  யாருக்காவது வழங்கப்படும். அது திராவிட மாடல் அரசின் அதிசயமாக அமையும்.

தமிழ்நாட்டில் பல லட்சங்கள் மதிப்பிலான பணிகளுக்கும், சில கோடிகள் மதிப்பிலான பணிகளுக்கும்  ஒப்பந்தப்புள்ளிகள் முறைப்படி கோரப்படுவதற்கு முன்பே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுவது  வாடிக்கையாகி விட்டது. ஒப்பந்தப்புள்ளி வழங்கும் நடைமுறைகள் முடிவதற்கு முன்பே வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வந்ததால் தான் இந்த முறைகேடு அம்பலத்திற்கு வந்துள்ளது. மொத்தத்தில் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசு ஆகும். இந்த  முறைகேடுகளுக்கு காரணமானவர்கள்  சட்டத்தின்  முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் காலம் வெகு விரைவில் வரும் என தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மேலும் படிங்க: தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் - எ.வ.வேலு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News