புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் இனி நீட் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை; தனியாக நடத்தப்பட்டு வந்த நுழைவுத்தேர்வு இனி இல்லை என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுவை: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் MBBS சேர இனி தனி நுழைவுத் தேர்வு கிடையாது என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அனைவரும் மத்திய அரசு நடத்தும் NEET தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். 
ஆனால், மத்திய அரசுக்கு சொந்தமான AIIMS மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்தி இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. நாடு முழுவதும் 15 AIIMS மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 1500 மருத்துவ இடங்கள் இருக்கின்றன. ஜிப்மரில் 200 மருத்துவ இடங்கள் உள்ளன.


இந்த கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. எனவே நீட் தேர்வு மூலமே இந்த மாணவர்களையும் தேர்வு செய்யலாமா? என மத்திய சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதில் அந்த கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்தது. 


எனவே, வரும் கல்வியாண்டு முதல் முதல் AIIMS, ஜிப்மர் நுழைவு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்வதற்கு இனி தனி நுழைவுத் தேர்வு கிடையாது. NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே படிப்பில் சேர்த்துக் கொல்லப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை ஜிப்மர் கல்லூரி வெளியிட்டுள்ளது.