)
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சேலத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலாவை கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு கட்சி தலைமைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியேற்றிய நிர்வாகிகளை கட்சியில் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் எனவும் செங்கோட்டையன் கூறி வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் தற்போது அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த
K.A.செங்கோட்டையன், M.L.A., (கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று அறிவித்துள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ