)
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக இதுவரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் இந்த தகவலை அவர் தெரிவித்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்டு 29 ஆம் தேதி சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" தொடர்பாக தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள் குறித்தும், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்கள்.
பொதுமக்களிடம் வரவேற்பு
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது ; அரசு சேவைகளை மக்களின் இல்லங்களுக்கேச் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி வைத்தார்கள். இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. கிராமப்புறங்களில் 15 அரசுத்துறைகள் சார்ந்து 46 சேவைகள், நகர்ப்புறங்களில் 13 அரசுத்துறைகள் சார்ந்து 43 சேவைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 4 ஆயிரத்து 600 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
"உங்களுடன் ஸ்டாலின் முகாம்" திட்டத்திற்கு தமிழ்நாட்டினுடைய அனைத்து மாவட்டத்திலும் பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நான் என்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் இருக்கக்கூடிய நான்கு முகாம்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி, கலந்து பேசி என்னென்ன தேவைகள் மற்றும் குறைகள் இருக்கிறது என்று கேட்டறிந்தேன். இம்முகாமிற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு அந்த மனுக்களையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். பல நேரங்களில் முகாம்களிலே மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பொது மக்கள் என்ன கேட்டு வந்திருக்கிறார்களோ அந்த சான்றிதழ்களை உடனுக்குடன் கொடுத்திருக்கிறோம். குறிப்பாக, இந்த முகாம்களில் பொதுமக்களுக்கான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய மிகப்பெரிய முகாமினை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தொடர்புடைய அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் 11.50 இலட்சம் மனுக்கள் வந்திருக்கின்றன. அதுதவிர, முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 இலட்சம் மனுக்கள் வந்திருக்கின்றது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்னது போல இந்த மனுக்களையெல்லாம் காகிதமாக பார்க்காமல், பொதுமக்களுடைய வாழ்க்கையாக, தனிமனிதனுடைய வாழ்க்கையாக நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் நம்முடைய அரசை நம்பி பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகளை நாம் முடிந்த அளவிற்கு வெகு விரைவாக அதை தீர்த்து வைக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன். இந்த மனுக்களை நாம் வழக்கமான குறைதீர்ப்பு நாள் மனுக்களாகவோ, மற்ற சாதாரண மனுக்களாகவோ கருதக்கூடாது. ஏனென்றால் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்படுகின்ற இந்த மனுக்களுக்கு நீங்கள் அனைவரும் அதிக அளவு முக்கியத்துவம் அளித்து மக்களுடைய தேவைகளை நாம் தீர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
குறிப்பாக தீர்வு காண இயலாத மனுக்களுக்கு அலுவலர்கள் எதற்காக தீர்வுகான இயலவில்லை என்ற காரணத்தினை முறையாக பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக, மனுக்களுக்கு அரசு தரப்பிலிருந்து விளக்கங்கள் தருவதை விடுத்து நாம் இயன்ற அளவு தீர்வுகள் தரவேண்டும் என்பதே நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய ஒரே எண்ணம், ஒரே நோக்கமாகும். மேலும் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்" நடைபெறுவது குறித்து அதிக அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், முகாம் நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும், இம்முகாம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ