)
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்திருக்கும் பெண்களுக்கு இன்று சுடச்சுட ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திட்டத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் நவம்பர் 30க்குள் இறுதி செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, புதிதாக மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தேர்வு செய்யப்படுபவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்பட உள்ளது. ராணிப்பேட்டையில் பேசிய அவர், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்குக் கண்டிப்பாக உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
துணை முதலமைச்சர் முக்கிய அறிவிப்புகள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டையில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்டு, ரூ.24.34 கோடி மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன், ரூ.43.74 கோடி மதிப்பீட்டிலான 115 முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவர் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் உரையாற்றிய அவர், மகளிர் முன்னேற்றத்திற்குத் திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, மகளிர் மேம்பாட்டிற்காக அரசு செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். மகளிர் விடியல் பயணத் திட்டம் (இலவச பேருந்துப் பயணம்) மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் பெண்கள் 820 கோடிக்கும் அதிகமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திட்டம் மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ.900 முதல் ரூ.1000 வரை சேமிக்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களும் இந்தத் திட்டங்களைப் பின்பற்றி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை: புதிய அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முன்னிலைப்படுத்திப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நிதி நெருக்கடி இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை திமுக அரசு உறுதியுடன் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். தற்போதுவரை 1.20 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும், இந்த ஆய்வுக்குப் பிறகு, தகுதியுள்ள புதிய பயனாளிகளுக்கு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் 1.14 கோடி பெண் பயனாளிகளுக்கு ரூ. 30,000 கோடிக்கு மேல் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள்
சமீபத்தில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் சுமார் 28 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் தற்போது கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் 14-ஆம் தேதிக்குள் பயனாளிகள் பட்டியலை இறுதி செய்ய வேண்டியிருப்பதால், கள ஆய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் பிறகு, நவம்பர் இறுதியில் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பி சோதனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. திட்டத்தின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மேலும் பல பெண்கள் இதன் பலனைப் பெறுவார்கள் என்றும், இந்தத் திட்டத்தில் விடுபட்டோருக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்குள் பணம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ