)
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஒரு மாபெரும் சமூக நல திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெண்களின் வங்கி கணக்கில், நவம்பர் மாதத்திற்கான உரிமை தொகையை முன்கூட்டியே வரவு வைக்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது, கோடிக்கணக்கான பெண்களுக்கு தமிழக அரசின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளது.
வழக்கமாக, மகளிர் உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விடுமுறை தினமாக இருந்தால், அதற்கு முந்தைய நாளில் வரவு வைக்கப்படும். இந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி வருவதால், மக்களின் பண்டிகை கால செலவுகளுக்கு உதவும் வகையில், உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, நவம்பர் மாதத்திற்கான உரிமை தொகையை, நவம்பர் 10 ஆம் தேதியே பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பயனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி செலவுகளை சமாளிக்க இந்ததொகை பெரிதும் உதவியாக இருக்கும் என்று பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கவும் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.12,000 உரிமை தொகையாக வழங்குவதன் மூலம், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம்.
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைவாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மற்றும் மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்கள், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியுள்ளன.
இந்த திட்டத்தில், பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட சுமார் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர், மீண்டும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் மனுக்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தகுதியான புதிய பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய பயனாளர்களுக்கும், நவம்பர் 10 ஆம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மகளிர் உரிமை தொகைக்கான அட்டைகளை நேரடியாக வழங்க உள்ளார். அன்றைய தினமே, அவர்களுக்கும் நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ