)
தமிழக அரசின் செயல்பாடுகள் பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் ஒரு சில திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. விடியல் பேருந்து, தாயுமானவர் திட்டம், மாணவர்களுக்கு உதவி தொகை, காலை உணவு திட்டம், உங்களுடன் ஸ்டாலின் போன்றவை உதவிகரமாக உள்ளது. தமிழக அரசின் மிக முக்கிய சாதனையாக பார்க்கப்படுவது கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தான். இந்த திட்டத்தில் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த திட்டத்தின் விதிகளில் பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம், இதுவரை திட்டத்தில் இணையாத தகுதியுள்ள லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், சில தகுதியான பெண்கள் பல்வேறு காரணங்களால் விடுபட்டிருந்தனர். அவர்களை மீண்டும் திட்டத்தில் இணைக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள், படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கூறுகையில், "உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, 45 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கப்படும். தகுதியுள்ள ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதே அரசின் நோக்கம். அதற்கேற்ப, திட்டத்தின் விதிகள் தளர்த்தப்பட்டு, அனைவருக்கும் உரிமைத் தொகை சென்றடைவது உறுதி செய்யப்படும்," என்று தெரிவித்தார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பெறுவதோடு மட்டுமல்லாமல், ஒரு மினி-அரசு அலுவலகம் போலவே செயல்படுகின்றன. இதன் மூலம், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே அரசின் பல்வேறு அத்தியாவசிய சேவைகளை பெற்று வருகின்றனர். நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட 13 அரசு துறைகளின் 43 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் கிராம பகுதிகளில் 15 அரசு துறைகளின் 46 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்தல் போன்ற பல்வேறு சேவைகளை மக்கள் இந்த முகாம் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்த ஒருங்கிணைந்த சேவை முகாம்கள், மக்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சிரமத்தை குறைத்து, அரசின் சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் ஒரு முன்னோடி முயற்சியாக பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய தளர்வுகள், தகுதியிருந்தும் பலன் பெற முடியாமல் இருந்த பல குடும்பங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நிலையில், அதனை மனதில் கொண்டு தான் ஆளும் அரசாங்கம் இது போன்ற சலுகைளை வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ