)
Agaram Foundation Chennai Ceremony Highlights: நடிகர் சூர்யாவின் கல்வி அறக்கட்டளையான 'அகரம்' பவுண்டேஷன் 20ஆம் ஆண்டில் நுழைகிறது. மேலும், அகரம் அறக்கட்டளையின் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் காலடி எடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 3) பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், கமல்ஹாசன், ஜோதிகா, கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், கசந்திராயன் 3 திட்ட இயக்குநர் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்து வேல், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் விஞ்ஞானி வீரமுத்து வேல் பேசுகையில், "சூர்யா அகரம் மூலம் செய்து வரும் காரியம் மனித இனத்திற்கே நன்மை, அதுவும் 15 ஆண்டுகாலமாக செய்து வருவது மிகவும் சிறப்புக்குரியது. அவர் நல்ல நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும். பொறியியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, நான் இந்த சாய்ராம் கல்லூரி மாணவன்தான்.
சந்தியராயன் 3 திட்டத்தில் மிகவும் சவாலானது பூமியில் இருந்து 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவிற்கு மில்லி செகண்ட் பிழை இல்லாமல் பயணிக்க வேண்டும். பூமியும் நிலாவும் நிலையாக இல்லை. ஆகவே மிகவும் சாவலான காரியம் அது. கோர் பொறியாளர் பணி என்பது மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு நல்ல ஊதியம் கூட கிடைக்கிறது. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு ஐ.டி., துறையில் பணியாற்றுவதால் பயன் இல்லை. எந்த துறையில் படிக்கிறோமோ அந்த துறையில் பணி செய்வதே சிறப்பாக இருக்கும்" என்றார்.
தொடர்ந்து விழாவில் பேசிய நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன், "நல்ல விஷயம் செல்பவர்களுக்கு முள்கிரிடம் தான் கிடைக்கும். சமூகத்தில் பெரியவர்கள் பட்டியலில் இடம் பிடிக்க என்னை போல சூர்யாவும் ஆசைப்பட்டுள்ளார்.
அகரம் பல மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை. இப்போது புரிகிறதா ஏன் நீட்டை எதிர்க்கிறோம் என்று... 2017ஆம் ஆண்டில் இருந்து பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி கனவை கெடுத்து உள்ளது இந்த சட்டம். இந்த சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலம் கல்விக்கு உள்ளது. இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது இந்த கல்விதான். இந்த கல்வி சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான்.
முதலமைச்சருடன் நேற்று பேசி கொண்டிருந்தேன். இதுபோன்ற (அகரம் போன்ற) என்ஜிஓ அறக்கட்டளைகளை ஆதரிக்க வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தேன். இவர்கள் பணம் கேட்பதில்லை, அனுமதி மட்டுமே கேட்கிறார்கள். அதை கொடுக்க நமக்கு என்ன வலிக்க போகிறது என்றேன். நாங்கள் செய்யதான் போகிறோம், செய்துகொண்டிருக்கிறோம் என்றார். அந்த பெருமையாடுதான் இந்த விழாவுக்கு வந்தேன்.
இதே திட்டத்தை பார்த்து அரசுக்கு ஐடியா வந்தாலும் அதில் தவறு கிடையாது. எதிரியிடம் இருந்தும் கூட நல்ல திட்டம் வந்தால் கேட்டுக்கொள்ள வேண்டும். இவர் (சூர்யா) நம்ம பிள்ளை. இங்கிருந்து எடுக்காமல் எங்கிருப்பது எடுப்பது. எனவே அரசு பெரிய திட்டத்தை அறிவித்திருக்கிறது, அதில் எனக்கும் உங்களுக்கும் கூட பங்கு இருக்கிறது. இது கல்வி சம்பந்தப்பட்டது. நீட் அரசியல் சம்பந்தப்பட்டது இல்லை, கல்வி சம்பந்தப்பட்டதுதான். கல்வியை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். மற்றவற்றில் வெல்ல முடியாது" என பேசியிருந்தார். தொடர்ந்து, அகரம் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
இறுதியாக, பேசிய நடிகர் சூர்யா, "தகுதியான முதல் தலைமுறை பட்டதாரிகள் படித்து முன்னேற வேண்டும் என பல முகம் தெரியாத நபர்கள் உழைத்து உள்ளனர். 20 வயதில் சமூக நலத்துடன் மீண்டும் அகரம் பவுண்டேஷன் இணைந்துள்ளது. அகரம் புண்டேஷனுக்காக உங்கள் அனைவரிடமும் உரிமையோடு கேட்கிறேன் 300 ரூபாய் கொடுங்கள், அது கண்டிப்பாக சரியான மாணவர்களுக்கு சென்று சேரும். அப்படி இல்லை என்றால் உங்கள் நேரத்தையாவது கொடுங்கள் எங்களுக்கு நிறைய தன்னார்வலர்கள் தேவை, அதுவும் இல்லை என்றால் உங்கள் அன்பு மட்டும் போதும்" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ