)
கரூரில் கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணையை, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விசாரணையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக நெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து, தமிழ்நாடு அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும், சென்னை உயர் நீதிமன்றம் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக காவல்துறையின் விசாரணை ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்றும், எனவே இந்த வழக்கை சிபிஐ போன்ற ஒரு சுயாதீன அமைப்பு விசாரிக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் வாதிடப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பரப்புரையில் ரவுடிகள் நுழைந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தவெக தரப்பில், "காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே விஜய் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். பல கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள நிலையில், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்பதில் சந்தேகம் உள்ளது," என்று வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், "விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்குக் காரணம். அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ விசாரணை தேவை. உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவே போதுமானது. ரவுடிகள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை," என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. "வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சிபிஐயின் விசாரணையை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையிடுவார் என்றும், இது விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த தீர்ப்பு, கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசியலிலும் இது ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சிபிஐ விசாரணையின் முடிவில், இந்த சம்பவத்தின் உண்மையான காரணங்கள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ