)
Karur Incident: கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, தள்ளு முள்ளு காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து பலரும் எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பதிவேற்றி வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கரூர் விவகாரம் தொடர்பாக பொய் செய்திகள் பரப்பி வீடியோ பதிவிடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளது. மேலும், இதுவரை 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கரூர் விவகாரம் தொடர்பாக பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம்! இதுவரை நடக்காத துயரம்; இனி, நடக்ககூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலேயும் துயரத்திலேயும் தான் இன்னும் இருக்கிறேன்.
செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை; உடனே அன்றைக்கு இரவே கரூருக்குப் போனேன். குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்தவர்களது குடும்பத்திற்கு, தலா பத்து லட்சம் ரூபாய் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி கொண்டு இருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, அரசு சார்பில் முழு சிகிச்சையை வழங்கி வருகிறோம்.
நடந்த சம்பவத்துக்கான முழுமையான - உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் சிலர் பரப்புகின்ற வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்.
எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் -அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள்.
இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொறுத்தவரைக்கும், அவர்கள் நம்முடைய தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது, இனிவரும் காலங்களில், எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது, நம் எல்லோருடைய கடமை. எனவே, நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, எல்லா அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன்.
மனித உயிர்களே, எல்லாவற்றிற்கும் மேலானது! மானுடப் பற்றே அனைவர்க்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லோரும், மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எப்போதுமே நாட்டிற்கு பலவகைகளிலே முன்னோடியாக தான் இருந்திருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலேயும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை" என கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ