)
Karur Stampede Case, Supreme Court Investigation: கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தை விசாரிக்க சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சிபிஐக்கு மாற்ற இயலாது என கூறி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் அமைத்த SIT விசாரணை ரத்து செய்து, விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கூட்டநெரிசலில் உயிரிழந்த சிறுவன் கிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மேலும், கரூர் கூட்டநெரிசல் வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோரின் முன் இன்று (அக். 10) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு, "சிபிஐ விசாரணை என்பது விதிவிலக்கான வழக்குகளின் தான் வழங்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளன. சிபிஐ வழக்கை முறையாக விசாரிக்காத எவ்வளவு எடுத்துக்காட்டுகள் உள்ளன. கடத்தல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் சிபிஐ விசாரணையின் போது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது
அரிய வழக்குகளை மட்டுமே சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன தீர்ப்பு உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மற்றொரு விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் SIT விசாரணையும் நடைபெறுகிறது.
உயிரிழந்த சிறுவனின் தந்தையினுடைய வலி எங்களுக்கு புரிகிறது. அதேவேளையில் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது. 'அஸ்ரா கர்க்' என்ற மூத்த அதிகாரி தான் சிறப்பு விசாரணை குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்
இந்த அதிகாரி சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர். சிறந்த ஒரு அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம். மேலும் தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்து உள்ளோம். மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.
அதே வேளையில் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழக அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணை குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும். இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக அவர்கள் முன்பு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்கு குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ limited resource தான். சிறப்பு புலனாய்வு விசாரணையில் எந்த தவறையும் கண்டறிய முடியாது. எனவே சிபிஐ தேவையில்லை" என வாதிட்டது.
உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பு, 'என்னுடைய மகனின் இறுதிச் சடங்கை செய்து கொண்டிருந்த சமயத்தில், நான் எவ்வாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்க முடியும்? உயர்நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடரவில்லை என மாநில அரசு கூறுவது, நெஞ்சமில்லாதவர் பேசுவது போல உள்ளது" என வாதிட்டது.
தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசலில் தான் திருமணம் செய்ய இருந்த பெண்ணையும், சகோதரியையும் இழந்த பிரபாகரன் என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவர் தரப்பு வாதத்தில், "விஜய் கூட்டத்தில் இதுபோன்ற கூட்டநெரிசல் நடைபெற உள்ளது என மதியம் 3.15 அளவில் திமுக உறுப்பினர் ஒருவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். சம்பவம் நடந்தது இரவு 7.15 மணிக்கு பின்னர்தான். பதிவிட்ட நபர் முன்னாள் அமைச்சர், அந்தப் பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்.
ரௌடிகள் கூட்டத்தில் நுழைந்தாலும், காவல்துறையால் தடி அடி நடத்தப்பட்டதாலும் தான் கூட்டநெரிசல் ஏற்பட்டது. திடீரென காவல்துறை அதிகாரிகள் தடி அடி நடத்த தொடங்கிவிட்டனர். வாகன எண்கள் இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. அந்தக் கூட்டத்தைப் செந்தில் பாலாஜியின் பெயர் பதித்த வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் மீதி நம்பிக்கை இல்லை. பிரேத பரிசோதனை நள்ளிரவில் நடத்தப்படாது. அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், அவர்களுடைய உடல்களை உடற்கூராய்வு செய்ய இரவோடு இரவாக அத்தனை மருத்துவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது எல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த விவகாரத்தை பொருத்த வரைக்கும் அனைத்து சூழ்நிலைகளையும் பார்க்கும் போது காவல்துறையோ, அரசு நிர்வாகமோ தவறு செய்யவில்லை என்பதை நியாயப்படுத்தவே இது அனைத்தும் நடைபெற்றிருக்கிறது. இதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கும் நோக்கமே இல்லை. எனவே தான் சிபிஐ விசாரணை தேவை" என வாதிட்டனர்.
அதற்கு நீதிபதிகள், "சிறப்பு அனுமதி அல்லது உத்தரவுகள் அடிப்படையில் பிரதே பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கம் தான். உச்ச நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் உடற்கூறு ஆய்வு இரவில் நடத்தலாம். அதில் எந்த தவறும் இல்லை. வேறு என்ன கோரிக்கை முன்வைக்கிறீர்கள்" என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பிரபாகரன் தரப்பு வழக்கறிஞர், "கடந்த ஜனவரி மாதம் அதிமுக அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது காவல்துறை அனுமதிக்கவில்லை. இடையூறாக இருக்கும் என்பதால் அந்தப் பகுதியில் அனுமதி கிடையாது என காவல்துறை கூறியது. ஆனால் செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், பல்வேறு fact இதில் ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்றம் ஒரு கோரிக்கை முன்வைத்தால், மற்றொரு கோரிக்கை மீது உத்தரவுப் பிறப்பிக்கிறது. எவ்வளவு உடற்கூறாய்வு மேடைகள் மருத்துவமனையில் உள்ளன? எவ்வளவு மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்?. இந்த விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டே இல்லை பரஸ்பரம் குறை சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. என்ன நடந்தது என்பது வெளிவர வேண்டும்" தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் வில்சன், "இந்த விவகாரத்தில் அரசு மீது காவல்துறை மீதும் அடுக்கடுக்கான புகார்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள். தவிர இதில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். மேலும் இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் மாவட்ட நிர்வாகத்தினுடைய அனுமதி பெற்று இரவில் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் சரியான தரவுகள் மற்றும் ஆதாரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உள்ளோம். அதே வேளையில் தேர்தல் பரப்புரையின் போது ரவுடிகள் களம் இறக்கப்பட்டார்கள், ஆளுங்கட்சியுடைய நபர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்று கூறுவதெல்லாம் ஏற்க முடியாது. இதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெறுமனே ஒரு மனுவை வைத்து தான் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள்
சேலத்தில் ஒரு மாநாட்டிற்காக வந்திருந்த சுமார் 200 மருத்துவர்கள் இந்த உடற்கூராய்வில் பயன்படுத்தப்பட்டார்கள். பல்வேறு மருத்துவமனைகளில் இந்த உடற்கூராய்வு நடத்தப்பட்டது. இரவிலேயே நடத்துவதற்கான காரணம் என்னவென்றால் உயிரிழந்த பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் அரசிடமும் நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலேயே அது நடத்தப்பட்டது.
பாதுகாப்பு குறைபாடு என்று கூறுகிறார்கள். ஆனால் 600 காவல்துறையினர் அதற்காக அந்த பிரச்சாரத்திற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய் இரவு 7 மணிக்கு வந்திருக்கிறார். காலை முதலே அந்த பகுதியில் மக்கள் கூடியிருந்த அந்த கூட்டமானது தண்ணீர், உணவுகள் இன்றி தவித்து பலர் சோர்வடைந்து மயக்கநிலை அடைந்தார்கள். தண்ணீர் கூட இல்லாமல் இருந்த நிலையில் தான் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அப்படி வழங்கும்போது கூட கூட்டத்தினர் அந்த தண்ணீர் பாட்டிலை வாங்க முண்டி அடித்தனர்" என வாதிட்டார்.
கூட்டநெரிசலில் ஒரு போலீசார் கூட காயமடையவில்லை என்று மனுதாரர் செல்வராஜ் தரப்பில் வாதிட்டத்திற்கு நீதிபதிகள் சிரிப்பை வெளிப்படுத்தினர். மேலும் நீதிபதிகள், "என்ன வாதம் இது? போலீசாருக்கு காயம் ஏற்படவில்லை. அதனால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூறுகிறீர்களா?" என கடுமையாக சாடினர். தொடர்ந்து இன்றைய விசாரணை நிறைவடைந்தது.
வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் பதில்மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர்களும் எழுத்தப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ