)
Karur stampede case : கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (CBI) மாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் இருவர், தாங்கள் அந்த மனுக்களை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்திருப்பதை, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற நீதிபதி கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். இதைக்கேட்டுக் கொண்ட நீதிபதி, இதை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இது ஒரு இடைக்கால உத்தரவு மட்டுமே என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
செப்டம்பர் 27 அன்று நடிகர் விஜய்-யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) நடத்திய பேரணியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை கோரி, TVK சார்பில் ஒரு மனு மற்றும் சில தனிநபர்கள் சார்பாகப் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து (SIT) வழக்கை CBI-க்கு மாற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமர்வு இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசு எழுப்பிய அதிர்ச்சித் தகவல்
CBI விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் நீதிபதிகள் அமர்விடம் ஒரு முக்கிய தகவலைத் தெரிவித்தனர். CBI விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் ஐந்து மனுக்களில், Paneerselvam Pitchaimuthu மற்றும் Selvaraj P ஆகிய இரு மனுதாரர்கள் தாங்களே அந்த மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை என்று மறுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இது ஒரு "தீவிரமான விவகாரம்" என்று மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் வலியுறுத்தினார்.
ஒரு மனுதாரரான P. செல்வராகரன், தான் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றப் பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். மற்றொரு மனுதாரரான Paneerselvam Pitchaimuthu-வின் வழக்கில், அதில் குறிப்பிடப்பட்டிருந்த உயிரிழந்த குழந்தையின் தாய், குழந்தையை வளர்த்தது தான் என்றும், மனுதாரர் அல்ல என்றும் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் ரியாக்ஷன்
மனுதாரர்கள் தாக்கல் செய்யாத மனுக்களை வைத்து நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது என்று தமிழக அரசின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த விவகாரத்தின் தீவிரத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலிப்பதாகத் தெரிவித்தது. இது குறித்து பதிலளித்த நீதிபதி, இந்தச் சிக்கலைத் தாங்கள் விசாரிப்பதாக உறுதியளித்தார். எனினும், "CBI விசாரணை கோரி மற்ற மனுக்களும் இருப்பதால், இந்த விவகாரம் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தாது" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இடைக்கால உத்தரவு:
மேலும், CBI விசாரணைக்கான தற்போதைய உத்தரவு, மேலோட்டமான அவதானிப்புகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மட்டுமே என்றும், வழக்கின் இறுதி பரிசீலனைக்கு அது உட்பட்டது என்றும் நீதிபதி மகேஸ்வரி மீண்டும் தெளிவுபடுத்தினார்.
வழக்கறிஞர் வில்சன் விளக்கம்
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பி.விலசன், இந்த வழக்கு குறித்து விளக்கம் அளித்தார். அதில், இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் உத்தரவு என்பது இடைக்கால உத்தரவு மட்டுமே என்றார். இந்த வழக்கில் மனுக்கள் மோசடியாக தாக்கல் செய்யப்பட்டது உறுதியானால், இந்த இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என விளக்கினார்.
விஜய்க்கு ஆதரவாக பாஜக, அதிமுக
தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சாரக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை விஜய் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. தொலைபேசி வழியாக வீடியோ கால் செய்து ஒரு சில குடும்பத்தினருடன் பேசியுள்ளார். விரைவில் அங்கு செல்ல திட்டமிட்டுள்ள அவர், அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார். விஜய்க்கு ஆதரவாக அதிமுக, பாஜக உள்ளது. குறிப்பாக, கரூர் விவகாரத்துக்குப் பிறகு விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பிற தலைவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ