Chennai JAC Meeting: சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் (Fair Delimitation) தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் "கூட்டு நடவடிக்கைக் குழு" (JAC - Joint Action Committee) கூட்டம் இன்று (மார்ச் 22) நடைபெற்றது.
பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரிடம் எந்த ஆலோசனையும் இல்லாமல் வரவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவு இல்லாதது குறித்து JAC தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.
Chennai JAC Meeting: மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
இந்தியாவில் செயல்படும் மாநிலங்களின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, JAC தனது பாராட்டுகளைத் தெரிவித்தது. விவாதங்களின் போது பிரதிநிதிகள் முன்வைத்த பல்வேறு கருத்துக்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், JAC ஒருமனதாகத் நிறைவேற்றிய முக்கிய தீர்மானங்களை இங்கு வரிசையாக காணலாம்.
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #Fair_Delimitation @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/NkftOlO5P2
— TN DIPR (@TNDIPRNEWS) March 22, 2025
Chennai JAC Meeting: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்
- ஜனநாயகத்தின் தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் அனைத்து மாநிலங்களின் அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிறர் இந்த விஷயம் குறித்து ஆலோசிக்கவும், விவாதிக்கவும், பங்களிக்கவும் முடியும்.
- 42வது, 84வது மற்றும் 87வது அரசியலமைப்பு திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம், மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய மாநிலங்களைப் பாதுகாக்கவும், ஊக்குவிப்பதற்கும் ஆகும்.
- தொகுதி மறுசீரமைப்பு குறித்த நிலைப்பாடு இன்னும் உறுதியாகவில்லை. அதுவரை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
- மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள் மற்றும் அதன் விளைவாக மக்கள்தொகை பங்கு குறைந்துள்ளது. இதற்காக அந்த மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்காக மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கு முரணான, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள நாடாளுமன்ற உத்திகளை ஒருங்கிணைக்கும்.
- நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மையக் குழு, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, மேற்கண்ட வழிகளில் ஒரு கூட்டுப் பிரதிநிதித்துவத்தை பிரமதர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கும்.
- கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சினையில் அந்தந்த மாநிலங்களில் பொருத்தமான சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடங்கி, அதை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும்.
- கடந்த கால தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வரலாறு, அதன் சூழல் மற்றும் முன்மொழியப்பட்ட தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கு JAC ஒருங்கிணைந்த பொதுக் கருத்துத் திரட்டல் உத்தி மூலம், தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
Chennai JAC Meeting: அடுத்த கூட்டம் ஹைதராபாத் நகரில்...
முன்னதாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் உள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு "கூட்டு நடவடிக்கைக் குழு" அமைக்க மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, இன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். தீர்மானங்கள் நிறைவேற்ற பின்னர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு நன்றியுரை ஆற்றினார். மேலும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கான 2வது கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் அடுத்து ஹைதராபாத் நகரில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai JAC Meeting: பங்கேற்ற தலைவர்கள்
மேலும், இந்த முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ், பிஜு ஜனதா தள கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் பர்மா, பிஜு ஜனதா தள கட்சியின் அமர் பட்நாயக், பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தள கட்சியின் சர்தார் பல்வீந்தர் சிங், கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம், கேரள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சலாம், கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பிரேம சந்திரன், கேரள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன், தெலங்கானா அகில இந்திய மஜ்லிஸ்- இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் இம்தியாஸ் ஜலில், கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி, தெலங்கானா மாநில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட், கேரளா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்று, தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
Chennai JAC Meeting: தலைவர்கள் வலியுறுத்திய கருத்துக்கள்
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு, சமூகப் பொருளாதார நலத் திட்டங்களைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய எந்தவொரு மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடக்கூடாது என்றும், ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை பல்வேறு மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளைப் பெற்று, ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் வலியுறுத்தினர்.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கொடுத்த காரசாரமான பதிலடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ