தமிழக நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனம் மற்றும் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் மீதான தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கை தொடர்ந்த முக்கிய மனுதாரரான ஆதி நாராயணன் என்பவரின் பின்னணி குறித்து நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. மிஸ் பண்ணாதீங்க

வழக்கின் பின்னணி?
தமிழக நகராட்சி நிர்வாக துறையில் வேலை வாங்கி தருவதாகவும், டெண்டர் ஒதுக்குவதாகவும் கூறி முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, மதுரையை சேர்ந்த ஆதி நாராயணன் மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் மீது பாய்ந்த சந்தேகம்
விசாரணையின் போது, மனுதாரரான ஆதி நாராயணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், "ஆதி நாராயணன் மீது மொத்தம் 32 வழக்குகள் உள்ளன. அதில் 18 வழக்குகள் முடிந்தாலும், இன்னும் 2 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது," என்று சுட்டிக்காட்டினார். இதற்கு ஆதி நாராயணன் தரப்பு, "இந்த வழக்கை நான் தாக்கல் செய்ததால் தான், என் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் போடப்பட்டுள்ளன," என்று பதிலளித்தது. ஆனால், இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, "2013ம் ஆண்டிலிருந்தே உங்கள் மீது வழக்குகள் உள்ளன. எனவே, உங்களின் உண்மைத்தன்மை மீதே சந்தேகம் எழுகிறது," என்று அதிருப்தி தெரிவித்தார்.
அமலாக்கத் துறையின் வாதம்
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, நாங்கள் சேகரித்த ஆதாரங்களை மாநில காவல்துறைக்கு அனுப்பியுள்ளோம். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே பலருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பெரும் தொகை கைமாறியதற்கான வாட்ஸ்-அப் ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்," என்று வாதிட்டார். அதேபோல, இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை ஆதாரங்களை அளித்துள்ளதால், விரிவான விசாரணை தேவையில்லை, நேரடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
தமிழக அரசின் பதில் என்ன?
தமிழக அரசு தரப்பில், "அமலாக்க துறையின் கடிதம் ஏற்கனவே அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 120 நாட்களில் இந்த விசாரணையை முடிக்க காலக்கெடுவும் உள்ளது. எடுத்தவுடனேயே வழக்கு பதிவு செய்தால், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தவில்லை என்று கூறி, குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கை ரத்து செய்ய வாய்ப்புள்ளது," என்று விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், "இந்த ஆதாரங்கள் அனைத்தும் வேறு ஒரு வங்கி மோசடி வழக்கில் சேகரிக்கப்பட்டவை. அந்த மோசடி வழக்கே நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது," என்பதையும் அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது, மனுதாரர் ஆதி நாராயணன் ஒரு பழக்கப்பட்ட குற்றவாளி போன்ற பின்னணியை கொண்டிருப்பதாக நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் அமலாக்கத் துறை ஒரு குற்ற பின்னணி கொண்ட நபரை பயன்படுத்தி இந்த வழக்கை நகர்த்துகிறதா என்ற சந்தேகம் திமுகவினர் மத்தியிலும், பொதுமக்களிடையேயும் எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









