Tamilnadu Live Today : சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலும் தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார். தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது என பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயாரா என கேள்வி எழுப்பியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு எப்போதும் ஏற்காது என திட்டவட்டமாக கூறினார். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராரமல் மத்திய அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தருமமே இல்லாமல் நடந்து கொள்வதாகவும், இந்த மிரட்டலுக்கு எல்லாம் தமிழ்நாடு அஞ்சாது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
நடிகை அளித்த பாலியல் புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஒரு மணி நேரம் வளசரவாக்கம் காவல்துறை விசாரணை நடத்தியது. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். தொகுதி மறுவரையறையில் தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மார்ச் ஒன்றாம் தேதியான இன்று பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், வணிக சிலிண்டருக்கான விலை உயரந்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...










