)
Madurai Muruga Pakthargal Maanadu: மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி பக்தியை வளர்க்கும் விதமாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் இந்த 'ஆன்மீக மாநாடு' நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை இந்து முன்னணி அமைப்பு நடத்துகிறது. உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இம்மாநாடு குறித்து மதுரை இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துகுமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பாக, இந்த வளாகத்திற்குள் முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் செட்களை (தற்காலிக) அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. அறுபடை வீடுகளின் பெருமைகளையும், தலப்புராணங்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அங்கு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், உலக நன்மைக்காக கூட்டுவழிபாடும், ஆன்மீக கலைநிகழ்ச்சிகளும் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து ஜூன் 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர். எனவே முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "அறுபடை வீடு செட் அமைத்து பூஜை நடத்த, 10 நாட்கள் அனுமதி வழங்க இயலாது. 3 நாட்கள் மட்டும் அனுமதி வழங்க இயலும். மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருகப் பக்தர்கள் மாநாட்டிற்கு, 52 நிபந்தனைகளுடன் மதுரை மாநகர் காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. ஜூன் 22 ம் தேதி நடைபெற உள்ள முருகப் பக்தர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறுபடை வீடு செட் அமைத்து 3 நாட்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்க தயாராக உள்ளோம்.
முருக பக்தர்கள் மாநாட்டின் போது இந்து முன்னணி சார்பில் வாகன ஊர்வலம், பேரணி நடத்தக்கூடாது. மதுரையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருகப் பக்தர்கள் மாநாட்டிற்கு கார், டூவீலரில் வருகை தருவோர் அந்ததந்த மாவட்ட போலீசாரிடம் உரிய அனுமதி பெற்று அனுமதி சீட்டு (PASS) வாங்கி வர வேண்டும். பிற மதம் குறித்து வெறுப்பு பேச்சு கூடாது. சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட தனி நபர் சோதனை உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 52 நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது" என வாதிட்டார்.
இதை தொடர்ந்து இடையீட்டு மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், "திருப்பரங்குன்றம் மற்றமொரு அயோத்தியாக மாறும் என பாஜகவின் ஹெச். ராஜா இதற்கு முன் வேறு ஒரு இடத்தில் பேசி உள்ளார். கருத்து சுதந்திரம் உள்ளது என்பதற்காக மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் பேசி, செயல்படக் கூடாது. இந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகளிடம் அனுமதி பெற வில்லை. அறுபடை வீடுகள் செட் அமைக்கலாம். ஆனால், பூ தூவி பூஜை செய்ய கூடாது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது.
மதுரை சித்திரை திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பில் நடக்கிறது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இந்து முன்னணியினர் 100 பேர் ஊர்வலம் செல்கின்றனர். பல நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் இந்து முன்னணி அமைப்பிற்கு எதிராக நாங்கள் மனு தாக்கல் செய்து உள்ளோம். மத ரீதியிலான நிகழ்வை, இந்து முன்னணி அமைப்பு அரசியலாக்க கூடாது. மதுரையில் மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதை சீர் குலைத்துவிடக்கூடாது" என வாதிட்டனர்.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுககையில், "ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன் வைத்து ஒரு மாநாடு ஒரு இடத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. மாநாட்டு வளாகத்திற்குள் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது. சில நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும். எங்களிடம் தன்னார்வலர்கள் உள்ளனர்" என வாதிட்டடனர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருகப் பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் மதுரை மாநகர் காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருகப் பக்தர்கள் மாநாட்டிற்கு முன்னதாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறுபடை வீடு செட் அமைத்து வழிபாடலாம்" என அனுமதி அளித்து உத்தரவிட்டார். மத நிகழ்வுகளில் அரசியல் கலக்ககூடாது என்பதை மனதில் கொண்டு நிகழ்வுகளை நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ