)
Madras High Court: இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் பல மடங்கு வளர்ச்சி கண்டுவிட்டன. அதுவும் இந்தியா போன்ற பெரிய சந்தை மதிப்பு வாய்ந்த நாடுகளில் பல்வேறு தொழில்நுட்பங்களின் மக்களின் கைகளுக்குச் சென்றடைந்துள்ளன.
தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இப்போது ஸ்மார்ட் டிவிகள் நுழைந்துவிட்டன. லேப்டாப் போன்ற சாதனங்களும் பரவலாகிவிட்டன. ஜியோ சந்தைக்குள் வந்த பின்னர் இணையமும் அனைவரிடத்திலும் வந்துவிட்டது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின்னர் கல்வியிலும் இணையத்தின் தேவை அதிகரித்துவிட்டது. இதனால் குழந்தைகள், இளைஞர்களின் மத்தியில் இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் இன்னும் அதிகமாக புழக்கத்திற்கு வந்துவிட்டது. இதில் நன்மைகள் அதிகம் என்றாலும் தீமைகளும் அதிகமாகவே உள்ளன.
குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் நேரத்தை வீடியோ கேம்ஸ், சமூக வலைதளங்களில் அதிகமாக வீணடிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல், ஆபாச வீடியோக்களுக்கும் மாணவர்கள், இளைஞர்கள் அடிமையாவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, 18 வயதை அடையாத சிறுவர்கள் கூட ஆபாச படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும், ஆபாச தளங்களால் பலரும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். பலரின் அந்தரங்கள் வீடியோக்கள் இதுபோன்ற ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதிகளவில் பரப்பப்படுவதாலும் பல பெண்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
அந்த வகையில், இணையதளங்களில் பகிரப்பட்ட தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஆகஸ்ட் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது மேலும் 13 இணையதளங்களில் பரவி உள்ளது. அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வாதிட்டார்.
தொடர்ந்து, "ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உள்ள 1,400 சட்ட விரோத இணையதளங்களை முடக்கியது போல, இந்த சட்ட விரோத இணையதளங்களையும் முடக்க வேண்டும்" என வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், நேரடியாக தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றுவது தொடர்பாக எளிதாக அணுகும் வகையில் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வருவதால் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நீதிபதி, "இராமாயணத்தில் இராவணின் தலை ஒவ்வொரு முறை வெட்டப்படும் போது மீண்டும் மீண்டும் முளைப்பது போல, மீண்டும் மீண்டும் அந்தரங்க வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன" என தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சட்ட விரோத இணைய தளங்களை முடக்கியது போல, இந்த இணைய தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார். மத்திய அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய ஏதுவாக வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ