Stay Order To Release NEET UG 2025 Result: நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு (NEET) கடந்த மே 4ஆம் தேதி நடத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டுக்கான இந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 20.8 லட்சம் பேர் தேர்வெழுதி உள்ளனர். இந்தியாவில் 548 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் என மொத்தம் 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்களில் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டது.
NEET UG 2025 Result: நீட் 2025 தேர்வு முடிவுகள்
இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட மூன்று பாடங்களில் இருந்து நீட் தேர்வில் கேள்விகள் எழுப்பப்படும். அதில், இந்தாண்டு உயிரியல் பாடப்பிரிவில் இருந்த வந்த கேள்விகள் ஓரளவு எளிமையாகவும், வேதியியல் பாடத்தில் இருந்த வந்த கேள்விகள் ஓரளவுக்கு கடினமாகவும் இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இயற்பியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் சிலர் கூறினர். மேலும், வரும் ஜூன் 14ஆம் தேதி 2025ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
NEET UG 2025 Result: 13 மாணவர்கள் வழக்கு
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அருகே ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் கடந்த மே 4ஆம் தேதி நீட் தேர்வை எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், 2.45 மணியளவில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனவும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரியும் திருவள்ளூரை சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், ராணிப்பேட்டையை சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
NEET UG 2025 Result: மாணவர்களின் புகார்
அவர்கள் அளித்த அந்த மனுவில், மின் தடை காரணமாக குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் இருந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டதால் சிரமத்துக்கு உள்ளானதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், கவன சிதறல்கள் காரணமாக தங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி தேர்வு எழுத முடியாத நிலையில், கூடுதல் நேரமும் ஒதுக்கப்படவில்லை எனவும், முழுமையாக தேர்வு எழுத முடியாததால், தேசிய தேர்வு முகமைக்கு (National Test Agency) புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள் மனுவில் கூறியுள்ளனர்.
பலருடைய கனவாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் சிறு குறைபாடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்பதால், மறு-தேர்வு நடத்த வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
NEET UG 2025 Result: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் இன்று (மே 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், "மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவை இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என தடை விதித்து விசாரணையை ஜூன் 2ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
NEET UG 2025 Result: மத்திய பிரதேசத்திலும் இதே சிக்கல்
தமிழ்நாட்டில் மட்டுமின்றி மத்திய பிரதேசத்திலும் இதுபோன்ற ஒரு பிரச்னை எழுந்திருக்கிறது. அதாவது, மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் நீட் தேர்வு எழுதும்போது மோசமான வானிலை காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னால் தேர்வை சரியாக எழுத இயலவில்லை என கூறி மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், இந்தூர் நகரில் பல தேர்வு மையங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் சில மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேர்வை எழுத நேர்ந்தது என்றும் மாணவின் வழக்கறிஞர் வாதாடியிருந்தார். அவர்களும் மறு தேர்வுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கை நேற்று (மே 16) விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடைவிதித்து விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு மாற்றம் : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் எப்போது? எப்படி விண்ணப்பிப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ