)
தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்தில் விடுபட்ட தகுதியான பயனாளர்களை இணைப்பதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே பயனடைந்து வரும் சிலருக்கு, ஆதார் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான பிரச்சினைகளால் பணம் சென்று சேராத சிக்கல்களை சரி செய்ய ஒரு புதிய மற்றும் எளிமையான தீர்வையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 1.15 கோடி பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயனடைந்து வரும் நிலையில், விடுபட்ட தகுதியானவர்களையும் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதை தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களில், சுமார் 40% மனுக்கள் மகளிர் உரிமை தொகை கோரியே அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கியுள்ளது. புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் என பலரும் இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல், புதிய பயனாளர்களின் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தகுதிகளுக்கான சில விதிகளையும் அரசு தளர்த்தியுள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியம் பெறாத, தகுதியுள்ள மற்ற பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று, அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள், மற்ற தகுதிகளை பூர்த்தி செய்தால், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
சில பயனாளிகளுக்கு, வங்கி கணக்குடன் ஆதார் எண் சரியாக இணைக்கப்படாதது, வங்கி கணக்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால், உரிமை தொகை சரியாக சென்று சேர்வதில் சிக்கல் இருந்தது. இந்த சிக்கலை கண்டறிந்து சரி செய்வதற்காக, அரசு ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு ஒரு ரூபாய் மட்டும் அனுப்பி, அந்த பணம் சரியாக சென்று சேர்கிறதா என்று சோதிக்கப்படுகிறது. இதன் மூலம், எந்தெந்த வங்கி கணக்குகளில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, உங்கள் வங்கி கணக்கிற்கு திடீரென ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டால், அது இந்த சரிபார்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ