)
ராணிப்பேட்டை: கூலி வேலை செய்து சிறுக சிறுக 9 லட்சத்தை சேர்த்த மூதாட்டியிடம் வங்கி மேலாளர் எனக்கூறி பணத்தை மர்ம நபர் ஆட்டையை போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 மாதங்களாக நடையாய் நடந்து நடவடிக்கை எடுக்கவில்லை என மூதாட்டி வேதனை தெரிவித்துள்ள நிலையில், இந்த வழக்கு கவனம் பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வெங்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரி (70). கணவனை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணம் நடைபெற்று வெவ்வேறு பகுதிகளில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி சுந்தரி காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வந்துள்ளார். அதில் கிடைத்த வருமானத்தை சிறிது சிறிதாக சேர்த்து தனது வயது முதிர்ந்த காலத்திற்கு தேவைப்படும் என சோளிங்கர் பகுதியில் இருக்கும் இந்தியன் வங்கியில் 9 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து சேமித்து வைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் சுந்தரிக்கு தொலைபேசியில் பேசிய நபா் இந்தியன் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி அவரது வங்கி கணக்கு எண் உள்ளிட்ட முக்கிய எண்கள் மற்றும் விவரங்களை கேட்டறிந்து கொண்டார். அந்த நபர் மேலாளர் என கூறவே மூதாட்டியும் அவரிடம் முக்கிய தகவல்களை அளித்துள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் அவரது வங்கியில் டெபாசிட் தொகையாக சேமித்து வைத்திருந்த 9 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனைப் பற்றி எதுவும் தெரியாத சுந்தரி மூதாட்டி, இரண்டு வாரங்கள் கழித்து வங்கிக்கு சென்று மருத்துவ செலவிற்காக பணம் எடுக்க சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்று பார்த்தபோது, தான் டெபாசிட் செய்து வைத்த தொகை மொத்தத்தையும் யாரோ எடுத்திருப்பதை அறிந்துள்ளார். தன் கணக்கில் உள்ள பணம் முழுதும் காலி ஆகிவிட்டதாக வங்கி பணியாளர்கள் தெரிவித்ததை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் மூதாட்டி சுந்தரி புகார் அளித்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனது பணத்தை மீட்டுத்தர வேண்டுமென தெரிவித்து நடையாக நடந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஆனால், மூதாட்டி சுந்தரியோ, எவ்வித வருமானமும் இன்றி உணவுக்குக் கூட வழியின்றி மிகவும் வறுமையான சூழலில் உள்ளார். வயது முதிர்ந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தான் இழுந்த பணத்தை பெற வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தினம் தினம் சென்று கோரி வருவதாக அவர் கூறி வருகிறார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.