தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் சீர்குலைந்து, சந்தி சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் திரு. சுந்தரேசன் அவர்கள். நேர்மையான வழியில் பணியாற்றியதன் விளைவாக சில தினங்களுக்கு முன்பு அரசு வாகனமின்றி சாலையில் நடந்து செல்லும் காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு அழிவு நெருங்கிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
மாநில உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றுகையில் தமிழகத்தில் நிகழும் காவல்துறை மரணங்கள் குறித்தும், அதில் பல உயர் காவல் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விரிவான அறிக்கை அளித்த திரு. சுந்தரேசன் அவர்களை, மாநில உரிமைகள் ஆணையரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான திரு. மணிக்குமார் அவர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் திமுக அரசு எதற்காக மயிலாடுதுறைக்கு பணி மாற்றம் செய்தது? நேர்மையானவர்களுக்கு திமுக அரசில் என்ன வேலை என்பதற்காகவா?
மயிலாடுதுறைக்கு மாற்றலாகி வந்த பிறகு கடந்த ஒன்பது மாதங்களில் சட்டவிரோத மதுவிற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் 1200 வழக்குகளை பதிவு செய்ததோடு, 700 நபர்களை கைதும் செய்திருப்பதாக திரு. சுந்தரேசன் அவர்கள் கூறுவதைக் கேட்டால், இடம் மாறினாலும் அறம் மாறாது நேர்மையாகத் தான் அவர் பணியாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது. அப்படியிருக்கையில் அவரது அரசு வாகனம் எதற்காக பறிக்கப்பட வேண்டும்? உரிய பாதுகாப்பின்றி பயணிக்கும் திரு. சுந்தரேசன் அவர்களை எதிராளிகள் எப்படி வேண்டுமானாலும் பழி தீர்க்கலாம் என மறைமுகமாக உணர்த்துகிறதா திமுக அரசு?
மயிலாடுதுறை எஸ்பி திரு. ஸ்டாலின் அவர்கள். மயிலாடுதுறை சிறப்பு ஆய்வாளர் திரு. பாலச்சந்திரன் அவர்கள். ஐஜி திரு. செந்தில் வேலன் அவர்கள். டிஜிபி திரு. டேவிட்சன் ஆசிர்வாதம் அவர்கள் ஆகியோர் மீது திரு.சுந்தரேசன் அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறிய பிறகும். குறிப்பிட்ட அரசு அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித விசாரணையும் நடக்காததைப் பார்த்தால் தமிழகத்தில் நடப்பது அதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சிதான் என்பது ஊர்ஜிதமாகிறது. ஆக. திமுக ஆட்சியில் பொதுமக்களின் புகார்களுக்கும் மதிப்பில்லை. காவல்துறை அதிகாரிகளின் மனக் குமுறல்களுக்கும் மதிப்பில்லை.
அதிலும் குறிப்பாக, மயிலாடுதுறை சிறப்பு ஆய்வாளர் திரு. பாலச்சந்திரன் அவர்கள் மணல் கொள்ளையர்களிடமும், சட்டவிரோத மது விற்பனையாளர்களிடமும் கையூட்டு பெற்றுக் கொண்டு நிறைய அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடுகிறார் என திரு. சுந்தரேசன் அவர்கள் கூறுவதைக் கேட்டால். குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே கடைந்தெடுத்த குற்றவாளிகளாக மாறி வருகின்றனரோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.
காவல்துறை உயர் அதிகாரிகளின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் அளிக்காமல், இதுவரை திரு. சுந்தரேசன் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளின் பட்டியலை வெளியிடுவது திமுக-வின் வழக்கமான மடைமாற்று அரசியல். பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றுவது திமுக-விற்கு கைவந்த கலை என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அதிகாரம் படைத்த காவல்துறையினருக்கும் அதே கதி தான் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இத்தனை மன அழுத்தத்தில் வேலை செய்யும் காவல்துறையினர் பொதுமக்களை எப்படி கருணையுடன் அணுகுவார்கள்? அரசின் மீதுள்ள கோபத்தை எங்கு சென்று தணிப்பார்கள்? இதனால் உண்மையில் பாதிக்கப்படுவது யார்? என்பதை பற்றியெல்லாம் சிந்திக்காத ஒரு அரசு. ஆளத் தகுதியற்றது. மக்களைத் தேடிச் சென்று குறைகளைத் தீர்க்கும் நாடகத்தில் பங்கேற்பதை விட தனது நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை நிர்வாகத்தை செம்மைப்படுத்துவது தான் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் தலையாய கடமை.
அதே சமயம் திரு. சுந்தரேசன் அவர்கள் குறிப்பிட்ட அதிகாரிகள் மீது முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி அவ்விசாரணை நடைபெற்று முடிவுகள் மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் திமுக அரசின் நிர்வாக லட்சணத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய திரு. சுந்தரேசன் அவர்கள் மீதான இடைக்கால பணிநீக்க ஆணையைத் திரும்பப் பெறுவதோடு, அவர் எவ்வித இடையூறுமின்றி நிம்மதியாக தன் பணியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் முதல்வர் செய்துதர வேண்டும். இல்லையேல் தமிழக பாஜக சார்பாக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும். பொதுமக்களுக்காக மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட காவலர்களுக்காகவும் நாங்கள் களத்தில் இறங்கிப் போராடத் தயங்க மாட்டோம் என்பதை முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ