)
Mayiladuthurai DSP Sundaresan Press Meet: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோதமாக அங்கு சாராயம் மற்றும் மது கடத்தல், மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
Mayiladuthurai DSP Sundaresan: சுந்தரேசன் எடுத்த நடவடிக்கைகள்
மேலும் அந்த மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 700 பேரை சிறையில் அடைத்துள்ளார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், சட்டவிரோதமாக மது கடத்தும் நபர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்கு சக்கர வாகனம், இன்று மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
Mayiladuthurai DSP Sundaresan: பணிக்கு நடந்தே சென்ற சுந்தரேசன்
முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சருக்கு பாதுகாப்பிற்கு செல்வதற்கு டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டதாகவும், அதனை கொடுக்க அவர் மறுத்ததாகவும் தகவல்கள் பரவின. மேலும், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாகவும் தகவல்கள் உலாவின.
இதனால் டிஎஸ்பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், அந்த வீடியோ காவல்துறை குரூப்பில் பதிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் இன்று தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு பணிக்கு நடந்து சென்றது பொதுமக்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Mayiladuthurai DSP Sundaresan: பொதுமக்கள் அதிருப்தி
மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை 'பந்தோபஸ்து டியூட்டி' என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு பணிக்கின்றனர் என்றும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியதாகவும் காவல்துறை செயல்பாடு மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.
Mayiladuthurai DSP Sundaresan: யார் இந்த டிஎஸ்பி சுந்தரேசன்?
இதற்கிடையில் டிஎஸ்பி சுந்தரேசன் நடந்து செல்லும்போது, பொதுமக்கள் சிலர் தங்கள் வாகனத்தில் ஏறுமாறு அவருக்கு உதவ முன்வந்தும் அதை டிஎஸ்பி ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலைவழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியாகவும் இருந்தார். அவற்றில் சுந்தரேசன் காவல்துறையினரின் தவறுகளை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என கூறப்பட்டது.
Mayiladuthurai DSP Sundaresan: காவல்துறை கொடுத்த விளக்கம்
இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் அலுவலகத்திற்கு நடந்து சென்றது குறித்தும் அவரது வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டது என்றும் பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கு மாவ்டட காவல்துறை சார்பாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியில், "புதிதாக இம்மாவட்டத்தில் தற்போது மதுவிலக்கு தோற்றுவிக்கப்பட்ட அமலாக்கப்பிரிவில் துணைக்காவல் கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி முதல் TN 51 G 0817 பதிவெண் கொண்ட Bolero வாகனம் அலுவலக பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய அலுவலக பணிக்காக கடந்த ஜூலை 11ஆம் தேதி அவர் பயன்படுத்தி வந்த Bolero வாகனம் எடுக்கப்பட்டு, மாற்று வாகனமாக TN 51 G 0616 பதிவெண் கொண்ட Bolero வாகனம் வழங்கப்பட்டது. பின்னர் இன்று (ஜூலை 17) மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த Bolero வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் என்பவர் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், மேற்கண்ட துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு புறமான செய்தி. செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
DSP Sundaresan Press Meet: 'உயர் அதிகாரிகளை விசாரிக்க வேண்டும்'
இந்நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் துறை டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தன்னை சஸ்பெண்ட் செய்தாலும் பரவாயில்லை என்றும் தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை தேவை என்றும் அவர் அதில் பேசியிருக்கிறார்.
டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "உண்மையை சொல்வதால் என்னை பணியிட நீக்கம் செய்தாலும் கவலை இல்லை. வளைந்து கொடுக்காத அதிகாரிகள் நேர்மையாக இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறார்கள். உளவு பிரிவு அதிகாரி செந்தில்வேல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
DSP Sundaresan Press Meet: தெரிந்துதான் பேட்டி கொடுக்கிறேன்
எனக்கு வாகனம் அளிக்காத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சுற்றும் நிலைமை உள்ளது. நான் மாறுதல் பெற்று வந்தபோது எனக்கு நான்கு மாத சம்பளம் அளிக்கவில்லை. எனக்கு இன்னும் ஏழு வருட பணி உள்ள நிலையில், விருப்ப ஓய்வுக்கும் மனு அளித்து உள்ளேன். இன்னும் ஏழு ஆண்டுகள் சர்வீஸ் உள்ள நிலையில், என்னை டார்ச்சர் செய்கின்றனர். நான் சஸ்பெண்ட் ஆக வேண்டும் என்று வேலை பார்க்கின்றனர்.
போலீஸ் வேலையில் இது ஒழுங்கு நடவடிக்கை உள்ளாகும் தவறு என்று தெரியும். தெரிந்தே தான் பேட்டி அளிக்கிறேன். இதே போன்ற நிலைமை வேறு எந்த அதிகாரிக்கும் வரக்கூடாது. சிறப்பு தனிப்படை பிரிவை வைத்து உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் பணம் வாங்கப்படுகிறது. அதிகாரிகள் செய்யும் தவறுக்கு காவல் துறையினர் பாதிக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ