Nainar Nagendran Bio: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை பூர்வீகமாகக் கொண்டவர். நயினார் நாகேந்திரன் 1960ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1989ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து செயல்பட தொடங்கினார்.
Nainar Nagendran Bio: ஜெயலலிதாவால் உயர்ந்த நயினார் நாகேந்திரன்
பணகுடி அதிமுக நகரச் செயலாளர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளராக அவரை அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்தார். மேலும், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவிலும் இருந்துள்ளார். ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என்ற அதிமுகவின் உயர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
Nainar Nagendran Bio: முதல் வெற்றிக்கு கிடைத்த அமைச்சர் பதவி
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட இவருக்கு 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்ற உடன், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கினார்.
அப்போதைய அமைச்சரவையில் போக்குவரத்து துறை, கிராமப்புற தொழில்கள் துறை, மின்சாரத்துறை, தொழில்துறை அமைச்சராக இருந்தார், நயினார் நாகேந்திரன். இதையடுத்து 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திருநெல்வேலியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து 2016 தேர்தலில் தோல்வியடைந்தார்.
Nainar Nagendran Bio: அதிமுக டூ பாஜக
நெல்லையின் செல்லப்பிள்ளையாகவும் அறியப்பட்ட இவர், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் நிலவியபோது, 2017ஆம் ஆண்டு நயினார் நாகேந்திரன் தன்னை அதிமுகவில் இருந்து விடுவித்துக்கொண்டார். அங்கிருந்து விலகிய உடனேயை பாஜகவில் ஐக்கியமானார். கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் பயணித்து வரும் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
Nainar Nagendran Bio: 2021 தேர்தலில் வெற்றி
அதை தொடர்ந்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு பாஜக சார்பில் வெற்றிபெற்றார். அதன்பின், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரானார். தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வந்தாலும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கும் நோக்கில் 2024 மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
Nainar Nagendran Bio: தென் மாவட்டத்தில் வேர் பரப்ப...
திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் பாஜக ஏற்கெனவே கால் பதித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கியிருப்பதால் அதனை மேலும் வலுவாக்கும். தென் மாவட்டங்களில் இருந்து பெரும் இளைஞர் பட்டாளத்தை ஈர்க்கும் விதத்திலும் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு, முன்னாள் அதிமுகவை சேர்ந்தவரான நயினாரை பாஜக தலைவராக்கியிருக்கிறது எனலாம்.
Nainar Nagendran Bio: அண்ணாமலையை தூக்கியது ஏன்?
அதாவது, எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை ஆகியோர் ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், இருவருக்கும் தொடர்ந்து அரசியல் களத்தில் மோதல்போக்கு நிலவி வந்ததன் காரணத்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதிமுக வருவது சிக்கலாகவே இருந்தது. தற்போது அதிமுக தலைவர்களுடன் இணக்கமாக இருக்கவும், எடப்பாடி பழனிசாமி சமூகத்தவராக இல்லாமல் இருக்கவுமே பாஜகவின் தேசிய தலைமை நயினார் நாகேந்திரனை தலைவராக்கியிருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர ஆலோசனை! அடுத்த பாஜக தலைவர் யார்?
மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









