Minister Durai Murugan: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (அக். 5) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் தமிழக அரசியலால் தற்போது தீண்டாமை பிரித்து ஆள்வது நிகழ்ந்துள்ளது என்றும் வறுமை இன்னும் ஒழியவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தது குறித்து கேட்டதற்கு, "அவர் இந்த மாநிலத்தின் கவர்னர் அல்ல எங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர். ஒரு கவர்னருக்கு உரிய கண்ணியத்தையும், அந்தஸ்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டு ஓர் எதிர்க்கட்சி தலைவரைப் போல தரம் தாழ்ந்து பேசுகிறார். எனவே நாங்கள் அவரை கவர்னராக மதிப்பதும் இல்லை அது பற்றி பேசுவதும் இல்லை.
Minister Durai Murugan: கவர்னர் ஸ்டேட்டமென்ட்டை புறக்கணிக்கிறேன்
ஆளுநர் கூறியது போல் பிரிவினைவாதம் எங்கே தலை தூக்கி இருக்கிறது என்றால் அது வடநாட்டில் தான். ஆனால் தமிழகம் தான் இன்றைக்கு எந்த விதமான வன்முறைக்கும் இடம் கொடுக்காமல், தென்றல் தவழுகின்ற பூமியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே கவர்னர் எங்கள் மீது ஏதாவது பழி சொல்ல வேண்டும் என நினைக்கிறார். இந்த மாதிரி சொன்னவர்கள் ஏராளமானவரை நாங்கள் பார்த்திருக்கிறோம். கவர்னரின் அந்த ஸ்டேட்மென்ட்டை நான் புறக்கணிக்கிறேன்" என்றார்.
Minister Durai Murugan: விஜய் கைதாவாரா...?
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறித்து கேட்டதற்கு, "நீதிமன்றம் என்பது நீதி சொல்வதற்காக இருப்பது. இரண்டு தரப்பு வாதத்தை கேட்ட பிறகு நீதிபதிகள் கொஞ்சம் கடுமையாக முன் வைத்திருக்கிறார்கள். அப்படியானால் இதில் நீதியும், கோபமும், கடமையும் இருக்கிறது என்று பொருள்" என்றார்.
மேலும், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, "யாரையும் அனாவசியமாக தமிழ்நாடு அரசு கைது செய்யாது. ஆனால் ஆதாரங்கள் என்பது தவிர்க்க முடியாமல் இருந்தால் அப்போது அரசு தனது கடமையை செய்யும். எனவே வீண் பயத்தோடு அவர்கள் பிராத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை" என பதிலளித்தார்.
Minister Durai Murugan: கரூர் சம்பவம் - திமுக தான் காரணமா?
கரூர் துயர சம்பவத்தில் இருந்து தமிழக கட்சிகள் எதை கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டதற்கு, "பொதுவாகவே அந்தந்த கட்சிகள் அவரவர்களின் நிலைமை மற்றும் தொண்டர்களின் வருகைக்கு ஏற்றவாறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க நாங்களும் கமிட்டி போட இருக்கிறோம். நீதிமன்றமும் சொல்லி உள்ளது, விரைவில் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
மேலும், கரூர் சம்பவத்திற்கு திமுக காரணம் என பேசப்படுவது குறித்து கேட்டதற்கு, "எங்களுக்கு என்ன காரணமாக இருக்க முடியும். நாங்கள் போலீஸ் போட்டு இருந்தோம், அனுமதி கொடுத்திருந்தோம். எப்படி, எப்படி செயல்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். இதில் எங்கள் மீது குற்றம் சொல்ல என்ன இருக்கிறது?. நாங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சொல்லவில்லையே. இவ்வளவு நடந்தும் கூட என்ன செய்ய வேண்டுமோ அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக இதில் எங்கள் மீது குற்றம் சொல்லுபவர்கள் தான் பகல் நேர அரசியல்வாதிகள்" என குற்றஞ்சாட்டினார்.
Minister Durai Murugan: எந்த கொம்பனும் திமுகவை தொட முடியாது
தவெகவை முடக்கத்தான் இதை திமுக செய்வதாக குற்றஞ்சாட்டப்படுவது குறித்து கேட்டதற்கு, "அப்படி ஒன்றும் எங்களை யாராவது பயமுறுத்தி விடுவார்கள், முடக்கி விடுவார்கள் என சொல்வதற்கு தயாராக இல்லை. எந்த கொம்பனாலும் எங்களை ஆட்டிப் பார்க்கவும், அசைத்துப் பார்க்கவும் முடியாது. காரணம் இது எதிர்ப்பிலேயே வளர்ந்த இயக்கம். அண்ணா சொன்னது போல் திமுக பாஷானத்தில் புழுத்த புழு, இதை வேறு ஒரு பாஷானம் அளிக்க முடியாது என்று சொன்னார். ஆகையால் எந்த கொம்பனும் எங்களை தொட்டு கூட பார்க்க முடியாது" என சவால் விடுத்துள்ளார்.
கரூர் சம்பவம் வரும் தேர்தலில் தவெக அல்லது திமுக இரண்டு கட்சிகளில் எதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என கேட்டதற்கு, "என்னங்க இது யார் எந்த வேஷம் போட்டாலும் எந்த அணியில் சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. We will come out , with flying colour. நாங்கள் வெற்றி பெறுவோம். அந்தக் கட்சிகளுக்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை" என்றார்.
Minister Durai Murugan: தவெக - பாஜக கூட்டணி?
கரூர் சம்பவத்தில் பாஜக ஆதயம் தேட பார்க்கிறதா என்ற கேள்விக்கு, "அதேதான் அவர்களுக்கு ஒண்டிக்கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் ஒரு இடம் வேண்டும். ஆகையால் யாருக்கு என்ன வந்தாலும் ஓடி ஓடி போய் பார்ப்பார்கள்" என்றார். தவெக - பாஜக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருக்குமா என்ற கேள்விக்கு, "எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும்" என்றார்.
மேலும் படிக்க |ஹெச். ராஜா பார்வையில் குறைபாடு, செந்தில் பாலாஜி கொடூரமானவர் இல்லை - டிடிவி தினகரன்
மேலும் படிக்க |ஈபிஎஸ் சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் ஏன்? - முழு விவரம்
மேலும் படிக்க |கரூர் துயர சம்பவம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு









