தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவன் நான்தான் ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது, எனது பெயரில் வேல் உள்ளது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

வேலூரில் ஏழு தளங்களுடன் சுமார் 198 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி நந்தகுமார் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பார்க்கப்போனால் தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவர் நான்தான். ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது என் பெயரில் வேல் உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அறநிலையத்துறை சார்பில் ஓராண்டுக்கு முன்பு முத்தமிழ் முருகன் சிறப்பான மாநாடு பழனியில் நடத்தப்பட்டது. அதில் எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. அந்த மாநாடு சிறப்பாக அமைந்தது. அனைத்து தரப்பினரும், அனைத்து அடிகளார்களும் கலந்து கொண்டார்கள். அதில் அரசியல் சாயங்கள் எதுவும் இல்லை.
ஆனால் மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டு நடத்தப்பட்டது. அரசியல்தான் அவர்களின் முழுமையான நோக்கம். அவர்கள் போட்ட தீர்மானமே அரசியல் உள்நோக்கத்தோடு உடையது தான். முருகன் மாநாட்டுக்கும், இந்துக்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம். ஆக தேர்தலுக்காக போடப்பட்ட மாநாட்டில் எப்படி எங்கள் முதல் தலைமுறையாய் இருக்கிற பெரியாரையும், அண்ணாவையும் ஏற்றுக் கொள்வார்கள்.
அவர்கள் நோக்கம் முருகன் வெளிப்படுத்துவது அல்ல. அவர்களைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது இருப்பிடத்தை காட்டிக் கொள்வதற்காக அந்தந்த மாநில கடவுள்களை கையில் எடுப்பார்கள். அந்தந்த மாநிலத்தில் உள்ள கடவுளை முன்னிறுத்தி பின்னால் அரசியல் செய்பவர்கள். பெரியாரையோ, அண்ணாவையோ பாராட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவும் மாட்டோம் அவர்களும் அதை செய்ய மாட்டார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும். தேர்தல் நேரத்தில் அதற்குரிய பதிலை சொல்வார்கள் என தெரிவித்தார்.
முன்னதாக மருத்துவமனை குறித்து பேசுகையில், முதல்வரை பொறுத்த வரைக்கும் ஒன்று கல்வி இன்னொன்று மருத்துவம் இவை இரண்டும் தான் இரண்டு கண்ணாக உள்ளது. அதன் அடிப்படையிலும் வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றும் இங்கு அரசு பல்நோக்கு உயர் பிரிவு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 25ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அதோடு சேர்க்காட்டில் கட்டப்பட்டுள்ள தாலுகா மருத்துவமனை மற்றும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு அணைக்கட்டில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தரப்பில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலகம், நூலகம் மற்றும் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார். அதற்குப் பிறகு ஆம்பூர் வாணியம்பாடி வழியாக ஜோலார்பேட்டை சென்று அங்கு மக்களை சந்தித்து பிறகு திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையும் திறந்து வைக்கிறார்.
மறுநாள் 26ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கி மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற பணிகளையும், நெடுஞ்சாலை பாலங்களையும் திறந்து வைக்கிறார். முதல்வர் வருகைக்காக வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆவலுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
மருத்துவமனையில் அனைத்து பணிகளும் முடிவுற்றதா? இல்லை நிலுவையில் உள்ளதா என கேட்டதற்கு, அனைத்து பணிகளும் முடிவுற்று உள்ளது. தூய்மை பனி மட்டும் நிலுவையில் உள்ளது ஆனால் அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்த பிறகு தான் படிப்படியாக அந்த தூய்மை பணி குறையும் என்றார்.
வேலூர் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்களா அல்லது ஏற்கனவே உள்ளவர்கள் பயன்படுத்தப்படுவார்களா என கேட்டதற்கு, முதலில் புற நோயாளிகள் பிரிவு தான் செயல்பாட்டிற்கு வரும் அதனைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் பிரிவு செயல்பாட்டிற்கு வரும் அதற்கு அடுத்தபடியாக குழந்தைகள் பிரிவு பச்சிளம் குழந்தைகள் பிரிவு செயல்பாட்டிற்கு வரும் இப்படி படிப்படியாகத்தான் ஒரு புதிய மருத்துவமனையை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியுமே தவிர எடுத்து எடுப்பிலேயே அனைத்து அனைத்து பிரிவுகளும் ஒரேடியாக செயல்பாட்டிற்கு வராது என அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ