EV Velu Case Tamil Nadu Latest News: கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின்போது செய்யார் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய எ.வ.வேலு உள்ளிட்ட 7 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றம் எண் 1-ல் இன்று (ஜூன் 10) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
EV Velu Case: எ.வ. வேலு வழக்கு விவரம் இதோ
இந்த வழக்கு குறித்து பார்த்தோமானால், கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் திமுகவின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கல்வி நிறுவனத்தில் அறிமுக கூட்டம் நடத்தியது, உணவு வழங்கியது, இலவச பொருட்கள் வழங்கியது என தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அந்த கூட்டம் நடத்தப்பட்டதாக அப்போதைய செய்யார் கோட்டாட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரின்தான் இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
EV Velu Case: 6 பேரும் விடுதலை
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உரிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அப்போதைய சட்டமன்ற வேட்பாளரும் தற்போதைய கடலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினரான விஷ்ணு பிரசாத், அவரது தந்தையும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமி உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து, இந்த வழக்கை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
EV Velu Case: எ.வ. வேலு பேட்டி
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, "2011ஆம் ஆண்டு செய்யாறில் தேர்தல் பணிகள் நிறைவடைந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தன் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதனை கடந்த 14 ஆண்டுகளாக செய்யார் நீதிமன்றத்தில் தொடர்ந்து திருவண்ணாமலை நீதிமன்றத்திலும் வழக்காடி தற்பொழுது நீதிமன்றம் வழக்கு தவறானது எனக்கூறி ரத்து செய்து நிரபராதி என ஆறு பேரையும் விடுவித்துள்ளது. நாட்டில் பல்வேறு நிலைகளில் பொய் வழக்கு போடப்பட்டிருந்தாலும் நியாயமாக உள்ள நீதியரசர்கள் முறையாக விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதியை வழங்கி வருகிறார்கள்" என்றார்.
EV Velu Case: 14 ஆண்டுகளுக்கு பின்...
2011 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி தொடர்ந்து 2016 மற்றும் 2021 தேர்தல்களிலும் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவே வென்று ஆட்சி அமைத்தது. 2021இல்தான் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. தற்போது இன்னும் 8-9 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
EV Velu Case: எ.வ. வேலு தான் அடுத்த குறியா...?
திமுக அமைச்சர்கள் பலர் தங்கள் மீதான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அடுத்தடுத்து அந்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் போன்றோர் மீதான வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதுமில்லை என விடுவிக்கப்பட்டனர். ஆனால், மேல்முறையீட்டில் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் உத்தரவிட்டதை கடந்த காலங்களில் பார்க்க முடிகிறது.
அதிலும், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததும் நினைவுக்கூரத்தக்கது. ஆனால் மேற்குறிப்பிட்ட அமைச்சர்கள் அனைவரின் பேரிலும் சொத்து குவிப்பு வழக்குகள் இருந்தன. ஆனால் தற்போது எ.வ. வேலு தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமை தொகை புதிய அறிவிப்பு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ