)
MK Stalin Condemns PM Narendra Modi: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முக்கிய தலைவர்கள் தங்களின் தீவிர பரப்புரையை தொடங்கிவிட்ட நிலையில், பீகார் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்திருக்கிறது.
அந்த வகையில், பீகார் மாநிலம் சாப்ராவில் நேற்று (அக். 30) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி தனது 44 நிமிட உரையின் ஒருபகுதியில், "தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்" என பேசி உள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று போட்டுள்ள X பதிவில், "இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 31, 2025
ஒடிசா - பீகார் என்று எங்கு… pic.twitter.com/HweXlXM5yE
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், 888 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
உழைக்கும் பீகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்.பி., தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே பிரதமர் மோடி, தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது. எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, ஸ்டாலின் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ