S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? தமிழ்நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்

mk stalin : S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என்பதற்கான விளக்கத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Nov 10, 2025, 06:48 AM IST
  • வாக்காளர் பட்டியல் திருத்தம்
  • ஏன் எதிர்க்க வேண்டும்?
  • தமிழ்நாடு முதலமைச்சரின் விளக்கம்
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? தமிழ்நாட்டு மக்களுக்கான முக்கிய தகவல்

mk stalin : தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?’ என்ற தலைப்பில் விளக்கம் அளித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், திமுக தொடர் எதிர்ப்புகளையும் மீறி, S.I.R. பணிகள் தொடங்கிவிட்டது. மக்கள் நிறைய பேருக்கு, S.I.R. பற்றி இன்னும் முழுதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், S.I.R.ஐத் தி.மு.க. ஏன் எதிர்க்கிறோம் என்று விளக்கவும், நம்முடைய வாக்குரிமையை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும், உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை, எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை என கூறியுள்ளார்.  ஆனால், போதுமான கால அவகாசம் தராமல், தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நம்முடைய நிலைப்பாடு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில "தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க. எப்படியெல்லாம் மோசடி செய்திருக்கிறது என்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் – ராகுல் காந்தி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ஏற்கனவே விளக்கியிருக்கிறார். கேரள மாநிலத்தின் மாண்புமிகு முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மாண்புமிகு மமதா அவர்களும்கூட இந்த S.I.R.-ஐத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.
 
நாமும், S.I.R. அறிவித்தபோதே, இது சதி என்று உணர்ந்து எதிர்த்தோம். கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசினோம்! அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டித் தீர்மானம் போட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம். வரும் 11-ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறோம். அதற்கு முன்பு, S.I.R.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்சினைகள், குழப்பங்கள் இருக்கிறது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இதோ, எனக்குக் கூட, இந்த வாக்காளர் திருத்த பார்ம் கொடுத்திருக்கிறார்கள். உங்களில் சிலர் கையிலும் இந்த ஃபார்ம் இந்நேரம் வந்து சேர்ந்திருக்கும்.

இதில், முதலில் நம்முடைய விவரங்களைக் கேட்கிறார்கள்... அதற்கு அடுத்தபடியாக, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் உள்ள வாக்காளரின் உறவினரின் பெயர் கேட்கப்பட்டிருக்கிறது. உறவினர் என்றால் யார்? அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? யார்? அனைவரும்தானே வாக்காளர் பட்டியலில் இருப்பார்கள்! இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா? வாக்காளரின் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில், முதலில் பெயரும், பிறகு, வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் என்றும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக, மீண்டும் உறவினர் பெயர் என்று கேட்கப்பட்டிருக்கிறது. 

முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா? அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட, தேர்தல் ஆணையம் அந்தப் படிவத்தை ஏற்றுக் கொள்ளாமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கிடும் ஆபத்து இருக்கிறது. நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது! நன்றாகப் படித்த, அறிவார்ந்த, பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் கூட, இந்தக் கணக்கீட்டுப் படிவத்தைப் பார்த்தால் அவர்களுக்கு தலை சுற்றிவிடும்.
 
இந்தப் படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, “தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணைய அதிகாரி என்ன சொல்கிறார், “உங்களுக்கு விருப்பமிருந்தால் ஒட்டலாம்” என்று அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். இது இன்னொரு இடியாப்ப சிக்கல்! ஒருவேளை, போட்டோ ஒட்டவில்லை என்றால், என்ன நடக்கும்? வாக்குரிமை பறிக்கப்படுமா? பறிக்கப்படாதா? தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரி, அதாவது ERO கையில்தான் இந்த முடிவு இருக்கிறது, இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது! இவ்வாறு, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக, அனைத்து இடத்திலும் குழப்பம்தான்.
 
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, சில அதி மேதாவிகள், “இந்த S.I.R. பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள்தானே? பிறகு ஏன் தி.மு.க. எதிர்க்க வேண்டும்?” என்று புரிதலற்ற, உண்மைக்குப் புறம்பான விவரங்களை வைத்துப் பேசுகிறார்கள். ஒரு பணியாளரைத் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவர் தேர்தல் ஆணையத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்! மக்களை திசைதிருப்பினால் போதும் என்று தவறான தகவலைப் பரப்பக் கூடாது. ஏதாவது பொய் சொல்லி, S.I.R.-ஐ எப்படியாவது நடத்திடலாமா? ஏழை எளிய மக்களின் வாக்குரிமையை நீக்கிவிடலாமா? என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது.

S.I.R. தொடங்கிய நாளில் இருந்து, களத்தில் இருக்கும் நம்முடைய கழகத்தினரும் நிறைய பிரச்சினைகளை நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வந்துகொண்டு இருக்கிறார்கள். 

* B.L.O.-க்கள் வருவதில்லை. 
* அவ்வாறு வந்தாலும், போதிய அளவில் கணக்கீட்டுப் படிவங்களைக் கொண்டு வருவதில்லை. 
* ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை

இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியின் ERO மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை, இத்தனை குறுகிய கால அவகாசத்தில் எவ்வாறு கொடுத்து வாங்குவார்? வாங்கினால் வேலை முடிந்ததா? அதுவும் இல்லை. அதைக் கணினிமயமாக்கி, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்! போகிற போக்கைப் பார்த்தால், எவ்வாறு இதையெல்லாம் செய்து முடிக்கப்போகிறார்கள்? என்று தோன்றுகிறது. 
திராவிட முன்னேற்றக் கழகமும் – கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது போல, அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அச்சம் இதன் மூலம் உறுதியாகிறது. 

BLO-க்கள் தங்களின் பணியைச் சரிவர செய்யவில்லை என்றால், இந்த S.I.R. பணியே மொத்தமாக பாதிப்பைச் சந்திக்கும். BLO-க்களும், கட்சிகளின் BLA2-க்களும் இணைந்து செயல்படத் தேவையான அனைத்தையும் செய்வோம் என்று தேர்தல் ஆணையம் சொன்னார்கள்! அவ்வாறு சொன்னார்களே தவிர, அவ்வாறு ஒரு சூழலை இதுவரை உருவாக்கவே இல்லை. தி.மு.க. BLA2 தயாராக இருந்தாலும் கூட, பல இடங்களில் BLO-க்கள் வராமல் இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறித்தான் நம்முடைய செயல்வீரர்கள் விழிப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். “உங்களின் வாக்கு நீக்கப்படுமா?” என்று கேட்டால், அவ்வாறு ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது, இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதைத் தடுக்க வேண்டும் என்றால், உங்கள் பகுதிக்குரிய BLO, யார்? என்று கேட்டு, அவரிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை வாங்கி, சரியாக நிரப்பி, திரும்பச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஒப்புகைச் சீட்டையும் மறக்காமல் வாங்க வேண்டும். இதுதான் உங்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும். 

வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் மறுக்க முடியாத – அடிப்படையான உரிமை. தற்போதைய நிலையிலான S.I.R. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு. இதை எதிர்கொள்ளத் தி.மு.க. சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். இது தி.மு.க.-வினருக்கு மட்டும் அமைத்திருக்கும் உதவி மையம் இல்லை; அனைவருக்குமானது! அதனால், கழக நிர்வாகிகள் மட்டுமல்லாமல், S.I.R.-ஆல் பாதிக்கப்படும் அனைத்துப் பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கும் 08065420020 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை, பெறலாம்! தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காக்க தி.மு.க. உங்கள் தோழனாக துணைநிற்கத் தயாராக இருக்கிறது. 

நம் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது! அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம்! S.I.R.-இன் சதிவலையில் சிக்காமல் நம்முடைய வாக்குரிமையைப் நிலைநாட்டுவோம்." என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் : களத்தில் இறங்கும் திமுக கூட்டணி

மேலும் படிக்க | வாக்காளர் பட்டியல் திருத்தம் : பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்

மேலும் படிக்க | சமீபத்தில் வீடு மாற்றியவரா நீங்கள்? வாக்காளர் பட்டியலில் என்ன செய்ய வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News