Tamil Nadu News: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று (ஏப்ரல் 2) மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று சட்டையில் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
Tamil Nadu News: வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
மேலும், "திரும்ப பெறு திரும்ப பெறு...! வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறு..." என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
Tamil Nadu News: 110 விதியின் கீழ் 2 அறிவிப்புகள்
இதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Tamil Nadu News: சென்னையில் காரல் மார்க்ஸிற்கு சிலை
முதலாவது அறிவிப்பு; உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ், இழப்பதற்கென்று எதுவுமில்லை, பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்! அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் அளித்த அறிக்கை pic.twitter.com/vdztnNeWol
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 3, 2025
வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ். உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான்.
Tamil Nadu News: இந்தியா குறித்து கார்ல் மார்க்ஸ்
அப்படிப்பட்ட ‘எல்லார்க்கும் எல்லாம்' என்ற சிந்தனையோடுதான், அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14ஆம் நாள், நம்முடைய நிதிலை அறிக்கையை இந்தப் பேரவையில் தாக்கல் செய்தோம். இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் அவர்தான். "தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற புவியியல் ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்.
இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்" என்று எழுதியவர் காரல் மார்க்ஸ்.
அதனால்தான் மார்க்ஸ் - எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து 1931ஆம் ஆண்டே வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள். அத்தகைய மாமேதை மார்க்ஸ் அவர்களது உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.
Tamil Nadu News: மக்கள் நாயகன் பி.கே. மூக்கையா தேவர்
இரண்டாவது அறிவிப்பு; அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும் உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையாதேவருக்கு நாளை (ஏப். 4) 103வது பிறந்தநாள்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றிவாகை சூடியவர் மூக்கையா தேவர்.
1971ஆம் ஆண்டு இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர். ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக வென்று மக்கள் நாயகனாக வளர்ந்தவர் அவர்.
1967ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றபோது பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு தோள் கொடுத்தவர் பி.கே.மூக்கையா தேவர்.
Tamil Nadu News: மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்
அப்போது இந்தப் பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராக இருந்த அவர்தான் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவரும் அவர்தான்.
தேவர் சமுதாய மக்களுக்காக கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தவரும் அவர். அதனால்தான் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் திமுக ஆட்சியில் அப்போது அமைக்கப்பட்டன.
'நியாயத்துக்கு ஒரு மூக்கையா' என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட பி.கே.மூக்கையா தேவர் சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
Tamil Nadu News: ஓபிஎஸ் வரவேற்பு
"முத்துராமலிங்க தேவருக்கு உடன் பிறந்த சகோதரராக ஆதரவாக இருந்தவர் மூக்கையா தேவர். மூக்கையா தேவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் வரவேற்பு தெரிவித்தார். பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்களும் முக ஸ்டாலின் அறிவிப்புக்கு பேரவையில் நன்றி தெரிவித்து வரவேற்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









