MK Stalin: மாநில உரிமைகளை காக்க ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin In Tamil Nadu Assembly: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின்கீழ் இன்று பேசியபோது,"நம் இந்திய நாடு விடுதலை பெற்று 75 ஆண்டை கடந்து விட்டது. பல மொழி கொண்ட மக்கள் வாழும் இந்த நாட்டில் அவற்றை பாதுகாக்க அரசியல் சட்டங்கள் உள்ளன.
கூட்டாட்சி கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா உருவாக்கப்பட்டது. மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பிரிக்கப்படுகிறது. அடிப்படை உரிமைகளுக்கே போராடும் நிலைதான் உள்ளது. மாநிலங்கள் அனைத்து அதிகாரமும் கொண்டவையாக இருந்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சிபெறும். இந்தியாவில் எந்த மாநிலமும் இதை முயற்சிக்கவில்லை.
MK Stalin: மாநில - மத்திய அரசு அதிகாரம்
ஆனால் அரை நூற்றாண்டுக்கு முன்பு 1967ஆம் ஆண்டு ராஜமன்னார் மூலம் குழு அமைத்தார், கருணாநிதி. மாநில உரிமை குறித்த ஆய்வை ராஜமன்னார் குழு மேற்கொண்டது. இதே சட்டமன்றத்தில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. சர்காரியா ஆணையம் , பூஞ்சி குழு அமைத்து மாநில - மத்திய அரசு அதிகாரம் குறித்து ஆராயப்பட்டாலும் ஏமாற்றமே எஞ்சியது.
MK Stalin: ஒத்திசைவு பட்டியலுக்கு மாறிய கல்வி
மாநில அதிகாரங்கள் ஒத்திசைவு பட்டியலுக்கு மடைமாற்றப்படுகிறது. நீட் தேர்வால் கல்வி கொள்கை முழுவதும் மத்தியரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீட் பல மாணவர்களின் மருத்து கனவை சிதைக்கிறது. நீட் தேர்வு ஒரு சாராருக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள் கொண்டது தமிழ்நாடு. நீட் மூலம் தமிழகத்தின் பொதுக்கல்வியை சிதைக்கின்றனர். மாநில பட்டியலில் இருந்து கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டு மும்மொழி கல்வியை திணிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சி செய்யப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதி வழங்காமல் வஞ்சித்து வருகின்றனர்.
MK Stalin: நிதி பகிர்வில் சிக்கல்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நிதி வழங்காததற்கு நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வியை மாநில பட்டியலில் இணைக்க வேண்டியது இன்றியமையாதது. மத்திய நிதி குழு பரிந்துரைப்படி தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நிதி குறைவாக பகிரப்படுகிறது.
அறிமுக நிலையிலேயே ஜிஎஸ்டியை எதிர்த்தோம். ஜிஎஸ்டியால் உற்பத்தி துறையில் சிறந்த மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. மாநிலங்களின் வருவாய் ஈட்டும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. மாநிலம் செலுத்தும் 1 ரூபாய் வரியில் 29 பைசாவே நிதி பகிர்வாக வருகிறது. இயற்கை சீற்றங்களுக்கு நிவாரண நிதி போதுமான அளவு வழங்கப்படவில்லை.
MK Stalin: வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
பிறப்பு விழுக்காட்டை கட்டுப்படுத்தியதை தண்டிக்கும் விதமாக 2026ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று இந்தியாவின் அனைத்து மாநில உரிமையை காக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றோம்.
MK Stalin: தாய்க்கு தான் தெரியும்...
நாட்டின் இறையாண்மை ஒற்றுமையை பேணி காப்பது மத்திய அரசின் கடமை. மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு அதிகம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற தேவையான அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது. குழந்தையின் தாய்க்குத்தான் அதன் பணிக்கான உணவு தெரியும். டெல்லியில் இருந்து யாரோ ஒருவர் அதை தீர்மானிக்க கூடாது.
MK Stalin: ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு
மாநில உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக் நிலைக்குழு அமைக்கப்படும். மத்திய மாநில அரசின் உறவு நிலை , சட்டங்கள் குறித்து உயர்மட்ட நிலைக்குழு ஆய்வு மேற்கொள்ளும். சட்ட விதிகளை ஆராய்ந்து கல்வி மாநில பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றதை மீட்க பரிந்துரை வழங்கும். நிர்வாக துறைகளில் தன்னாட்சி நடவடிக்கைக்கான பரிந்துரை வழங்கும். இந்த குழு தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கையை வரும் ஜனவரியில் தாக்கல் செய்யும்.
MK Stalin: மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி
மணிப்பூர், நாகலாந்து மக்களின் பண்பாடும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கான அதிகார, நிதிப் பகிர்வை அனைத்து மாநில நலன் கருதியே வாதங்களை முன்வைக்கிறோம். அண்ணா வழியில், கருணாநிதி முன்வைத்த மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி முழக்கத்தை செயல்படுத்தி மக்களாட்சியை மலரச் செய்வோம்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ