மாநில சுயாட்சியை காக்க... விரைவில் புதிய அறிவிப்பு - ஸ்டாலின் பேசியது என்ன?

MK Stalin News: சட்டப்பேரவையில் இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய நீண்ட உரையை இங்கு முழுமையாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 25, 2025, 04:34 PM IST
  • திமுக ஆட்சியில், சமூகநீதியும் தமிழ்மொழிக் காப்பும் இருகண்கள் - ஸ்டாலின்
  • தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை - ஸ்டாலின்
  • மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழை காக்க முடியும் - ஸ்டாலின்
மாநில சுயாட்சியை காக்க... விரைவில் புதிய அறிவிப்பு - ஸ்டாலின் பேசியது என்ன?

MK Stalin News: இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 25) பதிலளித்து இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

Add Zee News as a Preferred Source

MK Stalin News: ஆர்.பி. உதயகுமாரின் சந்தேகம்... முதல்வர் விளக்கம்

அந்த உரையில் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "இங்கு இருமொழிக்கொள்கை குறித்து என்ன உணர்வோடு நாங்கள் இருக்கிறோம், தமிழ்நாடு இருக்கிறது என்பதை பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏன் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள், குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இங்கே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார்கள்.

நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் (ஆர்.பி. உதயகுமார்) அதிகாரிகள் மூலமாக இந்த இருமொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய அரசிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்திற்கு விளக்கம் தந்ததாகவும் அதில் ஒரு தவறான கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யக்கூடிய நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். தயவுசெய்து எந்த சந்தேகமும் படவேண்டாம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றுதான் அவர்களுக்கு நாங்கள் விளக்கம் தந்திருக்கிறோம்.

MK Stalin News: டெல்லி சென்ற இபிஎஸ்-க்கு வேண்டுகோள்

இந்த நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவை சார்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள். 

இன்று காலையில் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படி சந்திக்கும் நேரத்தில் இதுகுறித்து அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற இந்த அவையின் மூலமாக நான் எடுத்துவைக்க வேண்டுகோளை இந்த கடமைப்பட்டிருக்கிறேன்.

MK Stalin News: தமிழ்நாட்டில் தமிழும்... ஆங்கிலமும்தான்...

தமிழ்நாட்டு மக்களின் உயிர்நிறைக் கொள்கையான இருமொழிக் கொள்கை குறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளோடு தமிழ்நாடு அரசும் முழுமையாக உடன்படுகிறது என்பதை மாமன்றத்தில் நான் மீண்டும் உறுதி செய்கிறேன்.

இந்த தமிழும் ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. இது மொழிக் கொள்கை மட்டுமல்ல; நமது வழிக் கொள்கையும் – விழிக் கொள்கையும் இதுதான்!. எந்தப் பழிச்சொல் சொன்னாலும், இந்த உயிர்க் கொள்கையில் விட்டுத் தர மாட்டோம்; விட்டு விலக மாட்டோம் என்பதை இம்மாமன்றத்தில் உறுதியாக மீண்டும் மீண்டும் நான் பதிவு செய்கிறேன்.

இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும்; பணமே வேண்டாம் – தமிழ்மொழி காப்போம் என்ற அந்த உறுதியை நான் பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருமக்கள் முன்னிலையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

MK Stalin News: இனமானத்தை அடமானம் வைக்க மாட்டோம்...

இரண்டாயிரம் கோடி ரூபாய் என்ன? பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று குறிப்பிட்டேன். மீண்டும் சொல்கிறேன், இது பணப்பிரச்சினை அல்ல; நம் இனப்பிரச்சினை! 

நம் தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டு மாணவக் கண்மணிகளை, இளைய சமுதாயத்தைக் காக்கும் பிரச்சினை. அவர்கள் நிதி தரவில்லை என்பதற்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமை அல்ல நாங்கள். தடைக்கற்கள் உண்டு என்றால், அதை உடைத்து எரியும் தடந்தோள்கள் உண்டென்று என்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது. இந்த ஆட்சியில், சமூகநீதியும் தமிழ்மொழிக் காப்பும் இருகண்கள்!

MK Stalin News: அண்ணா கொண்டுவந்த இருமொழிக் கொள்கை

இதே மாமன்றத்தில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, 1968ஆம் ஆண்டில் ஜனவரி 23ஆம் தேதி அன்று இருமொழிக் கொள்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

1. மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்த மன்றம் ஏற்க மறுக்கிறது. 

2. மத்திய அரசின் திட்டத்தை ஏற்க மறுக்கும் வகையிலும், மாணவர் எண்ணத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையே செயல்பாட்டில் இருக்கும்.

MK Stalin News: இரு மொழிகளே போதும்...

இது தமிழ்நாட்டுக்கு பேரறிஞர் அண்ணா அளித்த மாபெரும் கொடை! இது கொள்கை மட்டுமல்ல; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சட்டம்!. தாய் நிலத்துக்கு தமிழும் - உலகத் தொடர்புக்கு ஆங்கிலமும் என்று அண்ணா வடித்த சட்டம் அது. தமிழிலும் ஆங்கிலத்திலும் கரைகண்ட அவர் வடித்துக் கொடுத்தசட்டம் அது. 

இந்த இருமொழிக் கொள்கைதான் அரைநூற்றாண்டு காலமாக நம் தமிழ்நாட்டை வளர்த்து வந்துள்ளது. உலகளாவிய பரப்பில் நமது தமிழ் மக்கள் வாழவும், ஆளுமை செலுத்தவும், உயர்த்தவும், உன்னதமான உயரத்தை அடையவும் வழிவகுத்த கொள்கை இந்த இருமொழிக் கொள்கைதான். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள் நாம்.

யார் எந்த மொழியை கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை. அதே நேரத்தில், தாய்மொழியாம் தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.

MK Stalin News: பண்பாட்டு அழிப்பாக அமையும்...

மொழிக் கொள்கையில் தமிழ்நாடு வகுத்துள்ள பாதையும், அதன் உறுதியான நிலைப்பாடுமே சரி என்பதை நமது அண்டை மாநிலங்கள் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களும் இப்போது உணர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

இன்னொரு மொழியைத் திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்தான் இருமொழிக் கொள்கையை சிக்கெனப் பிடிக்கிறோம்.
இந்தி மொழித் திணிப்பு என்பது, ஒரு மொழித் திணிப்பு மட்டுமல்ல; பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால்தான் இதில் உறுதியாக இருக்கிறோம்; இருப்போம்!

MK Stalin News: அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்

இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள். இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமைப் பகுதிகளாக நினைப்பதால்தான் இதுபோன்ற மொழித் திணிப்புகளும், நிதிஅநீதிகளையும் செய்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காக்கவும் மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அறிவித்து இந்தளவில் என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்" என்றார்.

மேலும் படிக்க | செல்வப் பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் தொடர்பு - அதனால்தான் என்கவுன்டர்!

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் சுங்கக்கட்டணம்! எந்த எந்த மாவட்டத்தில் தெரியுமா?

மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு கெடு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News