வக்பு சட்டதிருத்த மசோதா: திருத்தங்களே தேவையில்லை.. - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

MK Stalin Letter: வக்பு வாரிய சட்டத்தில் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 2, 2025, 03:45 PM IST
  • இந்த மசோதா கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்டது.
  • இதில் திருத்தம் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
  • தற்போது 14 மாற்றங்களுடன் மீண்டும் மசோதா இன்று தாக்கல்.
வக்பு சட்டதிருத்த மசோதா: திருத்தங்களே தேவையில்லை.. - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

MK Stalin Letter: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டின.

Add Zee News as a Preferred Source

MK Stalin Letter: வக்பு சட்டதிருத்த மசோதா 2025

இதைத் தொடர்ந்து, இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவில் எக்கச்சக்க திருத்தங்களுக்கு கூட்டுக் குழுவில் இருந்த எதிர்க்கட்சிகள் பரிந்துரை செய்த நிலையில், 14 மாற்றங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு கடந்த பிப். 27ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. 

வக்பு மசோதாவின் புதிய வரைவு, நாடாளுமன்ற கூட்டுக் குழு அளித்த 25 பரிந்துரைகளையும் உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. இது தற்பு வக்பு (திருத்த) மசோதா, 2025 என்று அழைக்கப்படும். இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இருப்பினும், இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த திருத்தச்சட்டம் மீது இன்று 8 மணிநேரம் விவாதம் நடைபெற நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

MK Stalin Letter: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவு இருப்பதால் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிவிடும் என்றே கூறப்படுகிறது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறினால் மட்டுமே அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். இதையொட்டி, பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது பெரும் முக்கியத்துவத்தை பெறுகிறது எனலாம்.

1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெறக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 2) கடிதம் எழுதி உள்ளார்.

MK Stalin Letter: தற்போதைய வக்பு சட்டம்

அக்கடிதத்தில், "இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும், வக்பு சட்டம், 1995இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருக்கிறது"  என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த கடிதத்தில்,"தற்போதுள்ள வக்பு சட்டத்தில் உள்ள அம்சங்கள் நீண்டகாலமாகச் சிறந்த பயன்பாட்டில் உள்ளது. வக்பு சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளன. வக்பு சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதிலும், பாதுகாப்பதிலும் வக்பு வாரியங்களின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்துவிடும்" என குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin Letter: இந்த மசோதாவில் என்ன பிரச்னை? 

மேலும், அதில், "உதாரணமாக, மாநில வக்பு வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது என்பது இஸ்லாமிய சமூகத்தின் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை சுயாதீனமாக நிர்வகிக்கும் திறனை மற்றும் மத சுயாட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அமைவதுடன் 'வக்பு பயனர்' விதியை நீக்குவது பல வரலாற்று அடிப்படையிலான வக்பு சொத்துக்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும். 

மேலும், குறைந்தது ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடித்தவர்கள் மட்டுமே வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்கமுடியும் என்ற நிபந்தனை இஸ்லாமியர் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதைத் தடுத்துவிடும். இது நாட்டின் மத நல்லிணக்கக் கலாச்சாரத்திற்கு இடையூறாக இருக்கும்.

MK Stalin Letter: இந்த சட்டத்திருத்தமே தேவையில்லை

தற்போதுள்ள 'வக்பு சட்டம் 1995' போதுமானதாக உள்ளது. வக்புகளின் நலன்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தெளிவான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாலும், வக்பு சட்டம், 1995இல் இதுபோன்ற திருத்தங்கள் இப்போது தேவையில்லை என்பதே எங்கள் கருத்து" என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.  
 
மேற்கூறிய அனைத்தையும் கருத்தில்கொண்டு, வக்பு (திருத்த) சட்டம், 2024-ஐ முழுமையாக திரும்பப்பெற ஒன்றிய அரசை வலியுறுத்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த மார்ச் 27ஆம் தேதி அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தின் நகலை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவரது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | மோடி ஓய்வுக்கு பின் யோகி தான் பிரதமரா? அதற்கு அவரே சொன்ன பதிலை பாருங்க!

மேலும் படிக்க | 'ஓய்வை அறிவிக்கிறார் பிரதமர் மோடி' - ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்ற பின்னணி இதுதானா...?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News