)
நாகப்பட்டினம்: நாகையில் தெய்வ பக்தியை பறைசாற்றும், மெய் சிலிர்க்க வைக்கும் "தங்கமீன் விடும் திருவிழா” நடைபெற்றது. மீன் கொடி ஏந்தி வந்த மீனவர்கள், சிவபெருமானுக்கு கடலில் தங்க மீனை சமர்ப்பித்து, அவரை வணங்கி திருவிழாவை கொண்டாடினார்கள். தாரை, சங்கு முழங்க, கடலில் தாண்டவ நடனமாடிய சிவனடியார்கள் பக்தி பரவசத்தில் திளைத்த காட்சி பக்தர்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்தது.
மீனவ குலத்தில் பிறந்த அதிபக்தநாயன்மார்
63 நாயன்மார்களில் நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ குலத்தில் பிறந்தவர் அதிபக்தநாயன்மார். இவர் சிவபெருமானிடம் பக்தி கொண்டு தான் பிடிக்கும் முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம். அவ்வாறு கடலில் மீன்களை சமர்ப்பிக்கும் அதிபத்த நாயனாரின் பக்தியை சோதித்த சிவபெருமான், அவரது வலையில் முதல் மீனாக தங்க மீன் ஒன்றை கிடைக்கும் படி செய்தார்.
அந்த தங்க மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு அதிபக்தநாயனார் கடலில் விட்டார். அதிபக்த நாயன்மாரின் பக்தியை கண்டு இறைவன் அவருக்கு ஆவணி ஆயில்ய நாளில் காட்சியளித்தார். இதனை ஒவ்வொரு ஆண்டும் நாகையில் மீனவர்கள் தங்க மீன் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
கடற்கரையில் எழுந்தருளிய சந்திரசேகரர்
அதன்படி அதிபக்தநாயனாரின் தெய்வ பக்தியை மெச்சிக்கும் தங்க மீன் விடும் திருவிழா இன்று நாகப்பட்டினம், நம்பியார்நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக நீலாயதாட்சி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க வெள்ளி ரிஷப வாகனத்தில் ஊர்வலமாக வந்த சந்திரசேகரர், அம்பாள் மற்றும் அதிபத்த நாயனார் சுவாமிகள் கடற்கரையில் எழுந்தருளினர்.

தங்கமீன் சீர்வரிசை
அதனைத் தொடர்ந்து நம்பியார் நகரில் உள்ள புதிய ஒளி மாரியம்மன் மற்றும் அதிபக்த நாயனார் கோவிலில் இருந்து பூஜிக்கப்பட்ட தங்கமீன் சீர்வரிசையை மீன் கொடி ஏந்தி மீனவர்கள் வெகு விமர்சையாக கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் தங்கமீனுடன் படகில் நடுகடலுக்கு சென்ற மீனவர்கள், அங்கு சிவபெருமானுக்காக கடலில் தங்க மீனை விட்டு சமர்ப்பித்தனர்.
சிவபெருமானுக்காக கடலில் தங்க மீன் சமர்ப்பிக்கும் இந்த திருவிழாவிற்கு வந்த சிவனடியார்கள் தாரை, சங்கு முழங்க பத்தி பரவசத்துடன் படகில் தாண்டவ நடனமாடினர்.

தங்கமீன் விடும் திருவிழாவில், முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சிவனடியார்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சுவாமிக்கு படைத்த தங்க மீனை தொட்டு, சுவாமிகளை வேண்டி தரிசனம் செய்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ