)
Theni Flood Latest News Updates: தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது X பக்கத்தில், திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், "எழில் கொஞ்சும் தேனி மாவட்டம், தற்போது கடும் வெள்ளத்தில் சிக்கி அவதியுறுவதைக் கண்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. வரலாறு காணாத தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இது ஒரு விதத்தில் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடரே. பருவ மழை துவங்கும் முன்பே, கால்வாய்களைத் தூர்வாரி, நீர்நிலைகளைப் பேணி இருந்தால் இது போன்றதொரு பேரிடர் ஏற்பட்டிருக்குமா? பருவ மழையை முன்கூட்டியே கணித்து உரிய முன்னேற்பாடுகளைச் செய்து, மக்களை எச்சரித்து இருந்தால், இது போன்ற சேதம் தான் ஏற்பட்டிருக்குமா?.
முல்லைப் பெரியாறு அணையில் நான்கு நாட்களுக்கு முன்பு வரை 1,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று (அக். 18) இரவு மட்டும் தமிழக நீர்வளத்துறையால் 7,163 கன அடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பது தான் வெள்ளத்திற்கான காரணமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
மொத்தத்தில் திமுக அரசின் அலட்சியத்தால் நள்ளிரவில் தங்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளைப் பறிகொடுத்தும், வயல்வெளிகள் சேதமாகியும் வாழ்வாதாரமின்றி மக்கள் தவிக்கும் போது, மீட்புப்பணியைத் துரிதப்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறது விளம்பர மாடல் அரசு" என குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும் அந்த பதிவில், "முதல்வர் ஸ்டாலின் உடனடியாகத் தேனி விரைந்துச் சென்று போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக மக்களை வைத்திட முகாம்கள் அமைக்க வேண்டும். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கி கைகொடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என கோரிக்கை வைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் விடிய விடிய பெய்த கனமழையினால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், தேவாரம், சின்னமனூர் மற்றும் போடி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் குடியிருப்புக்குள் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் நகர் குடியிருப்பு பகுதி அருகே செல்லும் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் குடியிருப்பு பகுதிக்குள் ஆற்று நீர் புகுந்தது இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி உதவியுடன் பொதுமக்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகள் புகுந்த வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ